Politics
“ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு இடமில்லையா?” - நீதிபதி விவகாரத்தில் பா.ஜ.க. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட்டுள்ள ‘‘நீதித்துறையை நிலை குலையச் செய்யும் பா.ஜ.க. அரசு’’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கு அரண் செய்யும் கருத்தினை எதிர்த்து, அவர்மீது சட்டம் பாயவேண்டும் என்று அச்சுறுத்தும் போக்கிற்குக் கண்டனம் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு:
நமது அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பனபறிக்கப்படக் கூடாத அடிப்படை ஜீவாதார உரிமைகள் (Fundamental Rights) ஆகும்.
அப்படிப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்போரை, குறிப்பாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தத்துவங்களை எடுத்துக்காட்டும் குறுக்கு வழியில், ஆட்சி அதிகார அமைப்புமூலம் தவறாகப் பயன்படுத்திடுவதை சுட்டிக்காட்டும், அறிவு நாணயம் நிலைபெற்று, நேர்மையான அரசியல் ஆளுமையே நிலவிடவேண்டும் என்று கருதும் பலரையும் - எக்கட்சியையும் சாராதவர்களையும் அந்த அறிஞர்களைக்கூட கைது செய்து, போதிய சாட்சியங்கள் இல்லாவிடினும், அவர்களுக்கு எதிராக அதற்கான கருப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது குறித்து கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் சிலரை பிணையில் விடுவித்து, அவர்களின் உயிரையும், அதற்கும் மேலான அவரது சிந்திக்கும் உரிமையையும் காப்பாற்றி வருகிறது!
ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்மீது அச்சுறுத்தலா? :
ஜனநாயக நாட்டில், இப்படி கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப் பூட்டு போடலாமா? தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, நேர்மை, தனி மனித ஒழுக்கம், மனிதநேயம் இவற்றைக் கடைப்பிடித்து, சமூகத்திற்கு தனது ஓய்வு பெற்ற பிறகான வாழ்வு தொண்டறம் சார்ந்ததே என்பதை நிலை நாட்டிவரும் மாண்புமிகு ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அவர்கள்மீது சில பா.ஜ.க.வைச் சேர்ந்த காலிகள், அதிகார மய்யங்கள் காவல்துறையில் புகார் ஒன்றைத் தந்து, அவர்மீது ஏதாவது அழிவழக்குப் போடலாம் என்று சிந்தித்து, அச்சுறுத்தும் நடவடிக்கைகளை ஏவுவதற்கு திட்டமிடுவதாக வந்துள்ள செய்திகள் வன்மையான கண்டனத்திற்குரியவை!
நீதித்துறையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்த 10 ஆண்டுகால ஆட்சி எப்படி ‘‘இரட்டைப் பார்வையுடன்’’ நீதிபதிநியயமனங்களில் - கொலிஜியம் பரிந்துரைகளில் தலையிட்டு உள்ளது என்பதை உச்சநீதிமன்றமே பற்பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிடத் தவறில்லை.
நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட்ட நூலில் கண்ட குற்றமென்ன? :
குறிப்பிட்டவர்களின் பெயர்களை மட்டுமே நியமனம் செய்ய ஒப்புக்கொள்ளும் Pick and Choose, Selective acceptance போன்ற வாசகங்களையே பதப் பிரயோகமாக இருப்பதை ஜஸ்டிஸ் அரிபரந்தாமன், ‘‘நீதித் துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு’’ என்ற தலைப்பில் மறுக்க முடியாத, மறைக்கப்படக் கூடாத பல அரிய தகவல்களைத் தந்து ஜனநாயகத்தில் மக்களின் விழிப்புணர்வு முக்கியம் என்பதை நோக்கமாக்கிய அந்நூலினை வெளியிட்டுள்ளார்.
பல கருத்துகளை சட்ட வரம்புக்குட்பட்டு தனது விளக்கத்தைத் தந்துள்ளார். இதற்காக அவர்மீது சட்டம் பாயவேண்டும் என்கிறபோது, நீதித்துறையையோ மக்கள் நலம் சார்ந்து சமூக நலப் பாதுகாப்பையோ நாம் இழக்க முடியுமா? எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களின் ஆணிவேரை அறவே பிடுங்கி எறியவேண்டும். அதன் சட்டப்பூர்வ, நியாயபூர்வ ஆயுதமே தேர்தல், வாக்குரிமையாகும்! ஓய்வு பெற்ற அறிஞர்கள், நீதிபதிகள், நிர்வாகப் பணியினர், அறிவுசார் அறிஞர்களை அச்சுறுத்த ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது!
கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அராஜக ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் முதல் தேதி முடிவடையும் நிலையில் உள்ள இந்த 18 ஆவது பொதுத் தேர்தல், எதேச்சதிகார பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கனுப்ப வேண்டியதற்கான முக்கிய காரணங்களில், இதுவும் அதாவது நேர்மையுடன் கருத்துக் கூறும் நடுநிலையாளர்களைப் பயமுறுத்தி, பேசாதவர்களாக்கும் கொடுமைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க, யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்ற அடிப்படையில் உருவாக்கிய, நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றுவரும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு வீறு கொண்டு உழைத்து, வெற்றிக் கனி பறிக்க ஆயத்தமாவோம்! உதவாதினி தாமதம்! உடனே விழித்தெழுங்கள் வாக்காளர்களே!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!