Politics

கடினப்பட்டு சுதந்திரம் பெற்றது, ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிபணியவா? : ராகுல் காந்தி கண்டனம்!

இந்தியாவில் ஆங்கில திணிப்பு அதிகம் காணப்படுகிறது என்று தெரிவிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க.வும் 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், இந்தியா முழுக்க இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பரப்ப துடித்து வருகிறது.

மொழி திணிப்பு போதாது என்று, ஒவ்வொரு மாநிலங்களும், அதன் பெருமைக்குரிய வரலாறையும், புவியியல் தன்மையையும், மொழி வல்லமையையும், அரசியலையும் வெளிக்கொண்டு வரவிடாமல் தடுத்து, தனக்கான பார்ப்பன நடைமுறையை பாடமாக மாற்ற, புதிய தேசிய கல்வி கொள்கை போன்ற திட்டங்களையும் இயற்றி வருகிறது மோடி அரசு.

குற்றவியல் சட்டங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும், ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களும், நாட்டின் பெயரும் ஆங்கிலேயர்களால் தரப்பட்டுள்ளது. ஆகவே, அப்பெயர்களை மாற்றுகிறோம் என்று தெரிவித்து, பெரும்பான்மை மக்கள் அறியாத இந்தி மொழியில் பெயர் மாற்றங்களை செய்து வரும் நிலையில்,

அதற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாற்றங்களை ஒப்புகொள்ளாத, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு, ஒன்றிய திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய, நிதிப்பகிர்வை தராமல் நிலுவையில் வைத்து வஞ்சித்தும் வருகிறது மோடி அரசு.

இவை ஒரு புறம் இருக்க, சுதந்திரம் பெறுவதற்காக இந்தியர்கள் பலர் உயிர்தியாகம் செய்ததை விட கொடூரமான முறையில், சுதந்திரம் பெற்ற பிறகு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் உந்துதலால் உருபெறும் மதக்கலவரங்களாலும், இனக்கலவரங்களாலும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, சித்தரவதை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான சிறுபான்மையின மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் சொந்த மண்ணிற்காக போராடிய மக்கள், தற்போது இந்தியர்களே இல்லை என நிரூபிக்க CAA(Citizenship Amendment Act) , NRC (National Register of Citizens) என புதுப்புது சட்டங்களையும் இயற்றுகின்றனர் ஆர்.எஸ்.எஸ் கங்காணிகள்.

மேலும், இந்திய அரசியலமைப்பையும், நிர்வாகத்தன்மையையும் மாற்றி, ஒற்றை அதிகாரத்தினுள், இந்தியாவையே உள்ளடக்கவும் திட்டம் தீட்டி வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க.வும்.

இவ்வாறு சர்வாதிகாரத்தில் கொழுக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க குறித்து, காங்கிரஸ் MP ராகுல் காந்தி, “ஆங்கிலேயரிடம் கடினப்பட்டு விடுதலை பெற்றது, ஆர்.எஸ்.எஸ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் வாழ்வதற்கு அல்ல. இந்திய மக்கள் அனைவருக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக விளங்கும் இந்தியாவில், ‘ஒரே தலைவர்’ என்ற கருத்தியலை உட்புகுத்தி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதித்து வருகிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் நீடித்தால், 1000ஆண்டுகளுக்கு முன், சனாதனத்தின் பிடியில் சிக்கியது போல, மீண்டும் சிக்க நேரிடும் என்றும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்மொழிந்து வர, அதற்கு எதிராக நீதிமன்றத்தை வைத்து காய் நகர்த்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க.

இந்நிலையில், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர, சர்வாதிகார அரசியலுக்கு முட்டுக்கட்டையிட, இந்தியா கூட்டணி என்ற மாபெரும் ஆற்றல் உருபெற்று, பாசிசத்தை தூள்தூளாக்க ஏறுநடை போட்டு வருகிறது. அதற்கு மக்களின் ஆதரவும் கூடிக்கொண்டு வருகிறது.

Also Read: “திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ’ - பாஜக தேர்தல் அறிக்கை நாட்டிற்கே ‘வில்லன்’” : முதலமைச்சர் உரை!