Politics

பா.ஜ.க.வின் தவிர்க்க முடியாத தோல்வி : அதிகரிக்கும் இந்தியா கூட்டணியின் ஆதரவு!

மோடி அலையில் சிக்கிக்கொண்டுள்ள தேசிய ஊடகங்கள், பா.ஜ.க.விற்கு சாதகமான பல கருத்துக் கணிப்புகளை தெரிவித்து வந்தாலும், அக்கருத்து கணிப்புகளில் அமைந்துள்ள கேள்வி பதில்களை உற்று நோக்கியால் உண்மை அம்பலப்பட்டு போகும்.

அவ்வகையில் Mood Of The Nation என இந்தியா டுடே இதழ் வெளியிட்ட தேர்தல் கருத்துக்கணிப்பில், பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க.விற்கு வெற்றி என்று பொத்தாம் பொதுவாக தெரிவித்திருந்த நிலையில்,

அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள், பல உண்மைகளை உரக்க சொல்லியிருக்கிறது.

மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தால், யாருக்கு நன்மை அதிகரித்துள்ளது என்ற கேள்விக்கு, 52% பேர் “பெரும் முதலாளிகளுக்கு” என்றும், 11% பேர் “சிறு தொழில் முனைவோருக்கும்” என விடையளித்துள்ளனர்.

வேலைவாய்ப்பின்மை குறித்து கேட்கப்பட்டதற்கு 54% பேர், “மிக சிக்கலான” நிலையில் உள்ளோம் என்றும், 17% பேர் “சிக்கலான” நிலையில் உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வீட்டு செலவுகள் குறித்து கேட்கப்பட்டதற்கு, 54% பேர் “சமாளிக்க கடினமாக” உள்ளது என்றும், “செலவுகள் உயர்கிறது” எனினும் ஏதோ சமாளித்து கொள்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இவை தவிர்த்து அண்மையில் வெளியான CSDS LOKNITI கருத்துக் கணிப்பு படி, மோடி செய்த செயல்களில் முக்கியமானது ராமர் கோவில் என்றும்,

மோடி மீண்டும் ஆட்சியமைக்க முக்கிய காரணம் ராமர் கோவில் என்றும் பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்து, முதலாளித்துவ அரசியலை மேற்கொள்ளும் பா.ஜ.க, உழைக்கும் மக்களைப் பற்றி கவலைகொள்ளாததும், மோடி அரசிற்கு கிடைக்கிற ஓரளவு ஆதரவும் மத அரசியலால் கிடைத்த ஆதரவே என்றும் அம்பலப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான முக்கிய தகுதிகளாக விளங்கும், மக்களை சமமாக நடத்துதல், மதச்சார்பின்மையை நிலைநாட்டுதல், நாட்டையும் மக்களையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுதல் ஆகிய எவையும், பா.ஜ.க.விற்கு தொடர்பற்றது என்றும் தெளிவுபட்டுள்ளது.

மேலும், மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சமூக ஆர்வலர் பரகலா பிரபாகர், “பா.ஜ.க கட்சி கர்நாடகா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லை. குஜராத், மத்தியப்பிரதேசம், பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் சுமார் 50 இலிருந்து 60 இடங்கள் வரை பா.ஜ.க இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “தேர்தலில் திமுக Clean Sweep அடிக்கும் என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்கு (ஏப்ரல் 19) இன்னும் 4-5 நாட்களே உள்ளன. இதற்குமேல் எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தாலும் தலையெழுத்தை மாற்றுவது கடினம்” என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையில், அண்மையில் ஊடக கணிப்பிற்கும், மக்கள் நிலைப்பாட்டிற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பா.ஜ.க ஊடகங்களால் தலைதூக்கப்பட்டாலும், மக்களின் தீர்ப்பு என்னவோ அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது என்ற கருத்துகளும் ஒருபுறம் வேகமாக பரவி வருகிறது.

அரசியல் கட்சிகளை கடந்து, பொது மக்களும், அரசியல் சார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்ட துடிக்கிற சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் கூட இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவது, பா.ஜ.க.வில் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

Also Read: ”நாடாளுமன்ற தேர்தலில் மோடி நினைப்பது நடக்காது” : புதிய புள்ளிவிவரம் சொல்லும் பரகலா பிரபாகர்!