Politics
கச்சத்தீவு : பிரதமருக்கு 20 கேள்விகள்!
1. கச்சத்தீவை காங்கிரஸ் அரசு தாரை வார்த்து விட்டது என்று சொல்லும் பிரதமர் மோடி, 'கச்சத்தீவை நாங்கள் மீட்கப் போகிறோம்' என்று சொல்லி இருக்கிறாரா?
2. கச்சத்தீவை மீட்பதற்காக 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மோடி எடுத்த முயற்சிகள் என்ன?
3. 'கச்சத்தீவை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று இலங்கை பிரதமரிடமோ, இலங்கை அதிபரிடமோ ஒரே ஒரு முறை பிரதமர் மோடி இந்த பத்தாண்டு காலத்தில் கோரிக்கை வைத்துள்ளாரா?
4. ' தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மிட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பர்ய மீன்பிடி பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்" - என்று பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.5. 2022 அன்று கோரிக்கை வைத்தாரே. அப்போதாவது, பிரதமர் மோடி பதில் அளித்தாரா? அதன்பிறகாவது ஏதாவது முயற்சிகள் எடுத்தாரா மோடி?இதையே மனுவாகவும் கொடுத்தாரே முதலமைச்சர். அதற்காவது நடவடிக்கை உண்டா?
5. கச்சத்தீவை மீட்டுத் தரவேண்டும் என்று 31.3.2022 அன்று பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து முதலமைச்சர் மனுக் கொடுத்தாரே. இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?
6. 'கச்சத்தீவை ஒப்படைக்கக் கூடாது' என்று அன்றைய பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ( 29.6. 1974 ) கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் ( 21.8.1974) நிறைவேற்றினார்கள். தமிழ்நாடு முழுக்க 'கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டனநாள்' பொதுக்கூட்டம் ( 14.7.1974 ) நடத்தினார்கள். அதன்பிறகும் திமுக ஏதும் செய்யவில்லை என்று மோடி சொல்வது பித்தலாட்டம் அல்லவா?
7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 27.1.2015 அன்று பாஜக அரசு அளித்த பதிலில், 'கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது' என்று சொன்னது ஏன்?
8. கச்சத்தீவு ஒப்பந்தம் என்பதே இரண்டு ஒப்பந்தங்கள் ஆகும். முதல் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி மீன்பிடிக்க உரிமை உண்டு. இரண்டாவது ஒப்பந்தம் 1976 ஆம் ஆண்டு போடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு இல்லை. இந்த ஒப்பந்தத்தில் தான் 'மீன் பிடிக்க உரிமை இல்லை' என்பது சேர்க்கப்பட்டது என்பதாவது தெரியுமா?
9.கச்சத்தீவை மீட்கக் கோரி 2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைவர் கலைஞர் வழக்கு போட்டுள்ளார் என்பதாவது தெரியுமா? தெரியாதா?
10. பாஜக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், ' 1974 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 6 இன் படி இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிமை இல்லை.கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எந்த பாரம்பர்ய உரிமையும் இல்லை ' என்று சொல்லப்பட்டதே! ஏன் இப்படி சொன்னது பாஜக அரசு?
11. அதே மனுவில், ' இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் எல்லை விவகாரம் முடிந்து போன ஒன்று' என்று சொல்லியதும் பாஜக அரசு தானே? ஏன் அப்படி சொன்னது பாஜக அரசு?
12. கச்சத்தீவு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு முன்னால் வந்தபோது பாஜக அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக வழக்கறிஞரும், 'கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்க்கு உரிமை இல்லை' என்றாரே. அது வேற வாயா?
13. கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக அரசின் பதில் மனு அதிர்ச்சி அளிப்பதாக அப்போதை முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினாரே? அதற்கு மோடி பதிலே சொல்லவில்லையே?
14. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கச்சத்தீவு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை எழுப்பியது. ஆகஸ்ட் 10 அன்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிரதமர், ' கச்சத்தீவை யார் இலங்கைக்கு கொடுத்தது? அது பாரத மாதாவின் ஒரு அங்கம் அல்லவா?' என்று சொன்னாரே தவிர, 'கச்சத்தீவை நான் மீட்டுத் தருவேன்' என்று ஏன் சொல்லவில்லை?
15. இலங்கை அதிபர் உங்களைச் சந்திக்க வருகிறார், அவரிடம் கச்சத்தீவு பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று 20.8.2023 அன்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினாரே. இலங்கை அதிபரிடம் கச்சத்தீவைக் கேட்டாரா பிரதமர்?
16. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2022 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை சென்றார். 'கச்சத்தீவை 2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுடன் இணைக்க அண்ணாமலை காய்நகர்த்தி வருகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலையின் அஸ்திரம் இதுதான்' என்று எழுதினார்களே? அந்தக் காய் பழுத்துவிட்டதா? அல்லது காய்ந்து சுருங்கிவிட்டதா?
17.கச்சத்தீவு விவகாரம் குறித்து 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது பாஜக அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, '' இலங்கையுடன் போர் நடத்தினால் தான் கச்சத்தீவை மீட்க முடியும்" என்று சொன்னது ஏன்?
18. மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக அரசால் கச்சத்தீவு தொடர்பாக 3.6.2014, 5.12.2014, 7.8.2015, 14.6.2016, 17.6.2021, 31.3.2022, 26.5.2022 - ஆகிய நாட்களில் கோரிக்கை மனுக்கள் தரப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் மோடி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
19.கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட்ட ஒப்பந்த சட்டம் அல்ல. எனவே மோடி எந்த ஆக்ஷனிலும் இறங்கலாம். தயாராக இருக்கிறாரா?
20. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்கலாம். இலங்கை மீது போர் தொடுக்கலாம். தயாராக இருக்கிறாரா?
- முரசொலி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!