Politics
"மோடியின் தழுவல் மரண தழுவல், பாஜகவுடன் சேரும் கட்சி பஸ்பமாகிவிடும்"- அதிமுகவுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கை!
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட மண்ணடி தங்கசாலையில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ப.சிதம்பரம், "பாஜகவை நம்மை போல அரசியல் கட்சி என நினைக்கக் கூடாது. அதிமுக, பாஜக அணிகள் இரண்டும் ஒன்று தான். மூன்று மாதம் முன்னாள் வரை அதிமுக பொதுச்செயலாளர் நாள்தோறும் மோடி, அமித்ஷாவோடு பேசிக்கொண்டு இருந்தார். இப்போது கூட்டணி இல்லை என்பது போன்ற தோற்றம் இருக்கிறது. தோற்றாலும் தேர்தலுக்கு பின் இருவரும் ஒன்றாவார்கள். பாஜகோடு தேர்தலில் சேரக்கூடாது என்று எடப்பாடி முடிவெடுத்தாரே, தவிர நிரந்தரமாக முடிவெடுக்கவில்லை, இதனால் தான் அதிமுக மேடையில் பாஜகவை விமர்சிப்பதில்லை, பாஜகவின் மேடையில் அதிமுகவை விமர்சிப்பதில்லை. .
எடப்பாடி அவர்களே, தேர்தலுக்கு பின் மோடி அவர்கள் உங்களை தழுவுவார். அது மரணத் தழுவல், அவர் தழுவியவுடன் உங்கள் கட்சி கூறுகூறாக உடைந்து விடும், பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும் அவர்கள் பஸ்பமாகிவிடுவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வரிகட்டவில்லை என நோட்டீஸ் அனுப்பினார்கள். எந்த கட்சியும் வரி கட்ட வேண்டியதில்லை. அப்படித்தான் சட்டமும் உள்ளது. நானும் 10 ஆண்டுகள் நிதி அமைச்சர் ஆக இருந்தேன், நிதியமைச்சத்தின் கீழ் தான் வருமான வரி துறையும் வரும். இப்படி பார்த்ததில்லை. இப்போது தான் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்கள். இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்தளவிற்கு இருக்கிறதென்றால், பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் காங்கிரஸ் கட்சி பெரிய குற்றத்தை செய்ததைப் போல தண்டிக்கப்பட்டதை போல காட்டப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே ஒன்றிய அரசு கைது செய்யலாம் என்றால், தேர்தல் எதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்கு. ஆளுநர் என்பவர் ஏன் அரசியலமைப்பு சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்? ஜனநாயகம் இருந்ததால் தான் மோடி பிரதமராக ஆனார். ஜனநாயகம் இன்று ஐசியுவில் உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற இதுதான் கடைசி தேர்தல். ஜனநாயகம் உயிருடன் இருக்கும்போதுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், அதன்பின் உள்ளாட்சி தேர்தல் என 3 தேர்தல் வெற்றியை தொடர்ந்து நான்காவது தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்து இறங்கும்போது இந்தியா வளர்ச்சியான நாடாக இருந்தது சராசரி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது. பல நிலைத்த திட்டங்களை காங்கிரஸ் அரசு தந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடைபெறவில்லை. ஆங்காங்கே சிறியதாக இருந்தாலும், உடனடியாக அவை அணைக்கப்பட்டது. ஊதி பெரிதாக ஆக்கவில்லை.காங்கிரஸ் ஆட்சி முடிவில் 400 ரூபாயாக இருந்த காஸ் விலை, இன்று ஆயிரம் ரூபாயை தாண்டியது. பெட்ரோல், டீசல் விற்பனையில் மோடி அரசுக்கு 2.5 லட்சம் கோடி கிடைக்கிறது. மக்களிடமிருந்து உறிஞ்சுகிறாரே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 22% ஆக வரியாக குறைத்தார். அவர்கள்(கார்ப்பரேட்) மீது வரிக்குறைப்பு. உங்கள்(மக்கள்) மீது வரித்திணிப்பு. இதற்காகவா நாங்கள் ஜிஎஸ்டியை உருவாக்கினோம். பணக்காரர்கள் கட்டுவது 14% ஜிஎஸ்டி தான். மீதம் 86% சாமானிய மக்கள் கட்டுவதுதான்" என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!