Politics
அப்போ MP, இப்போ வேட்பாளர்... அரசியல் சாசனம் மட்டுமே முக்கிய குறி... அம்பலமான பாஜகவின் திட்டம் !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது, ஜூன் 1-ல் நிறைவடைகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவினரும், மோடியும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, முதற்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்.
மேலும் கடந்த நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், மோடி உரையின்போது பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் என தெரிவித்தார். அப்போது தொடங்கி இப்பொது வரை நாடு முழுவதும் பாஜகவும், அதன் கூட்டணியும் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என பாஜகவினர் பேசி வருகின்றனர்.
குறிப்பாக மோடி பேசும் ஒவ்வொரு மேடையிலும் இந்த வார்த்தையை சொல்லமால் இருந்ததில்லை. மோடியின் பேச்சை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவ்வாறு பாஜக 400 இடங்களையே கைப்பற்றுமெனில், அது முறைகேடு மூலமாக மட்டுமே எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்றால், நாடு மீண்டும் அடிமைப்பட்டு விடும் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கு இருக்கும் சுதந்திரம் பறிபோய் விடும் என்றும், அரசியல் சாசனத்தையும் இல்லாமல் போய்விடும் என்றும் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில், தற்போது பாஜக வேட்பாளர் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதி மிர்தா. இவர் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டபோது, ”அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ வெளியாகி பலரது மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மேலும் பாஜகவின் உண்மையான திட்டம் இதன்மூலம் வெளிச்சமாகியுள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியலமைப்பு சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் கூறுவது, இது முதல்முறையல்ல.
கடந்த சில வாரங்களுக்கு முன்னாள், பாஜக எம்.பி ஒருவரும் இதே போல் பேசி சர்ச்சையில் சிக்கினார். கர்நாடக மாநில பாஜக எம்.பி அனந்த குமார், "மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இதனை குறிப்பிட்டே பிரதமர் மோடி, இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும்" என்றார்.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயலும் பாஜகவின் திட்டம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. பாஜகவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!