Politics

"CBI பல வழக்குகளையும் துப்பு துலக்க அழைக்கப்படுகிறது"- பாஜக அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அதோடு எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை புலனாய்வு அமைப்புகளான CBI, IT, அமலாக்கத்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி மிரட்டியும் வருகிறது.

அந்த வகையில் பாஜகவின் மிரட்டல்களுக்கு அடிபணியாத கட்சிகளை சேர்ந்தவர்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமலேயே நீதிமன்ற காவல் மூலம் சிறையில் வைப்பதும் தொடர்ந்து வருகிறது.

தன்னாட்சி அமைப்புகளாக செயல்படவேண்டிய அமைப்புகளை இப்படி கட்சி சார்பு அமைப்புகளாக மாற்றிய பாஜகவை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், புலனாய்வு அமைப்கள் அதன் பங்கிற்கு அப்பால் உள்ள சில வழக்குகளிலும் தலையிடக் கேட்டுக்கொள்ளப்படுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி CBI உருவாக்கப்பட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் CBI அமைப்பின் முதல் இயக்குநரான டிபி கோஹ்லியின் நினைவாக, டிபி கோஹ்லி நினைவு விரிவுரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "புலனாய்வு அமைப்பான CBI அதன் பங்கிற்கு அப்பால் உள்ள சில வழக்குகளிலும் தலையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது CBI உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைத் தாண்டி செயல்பட வேண்டிய பொறுப்பைச் ஏற்படுத்துகிறது.

நாம் நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகளை மிக மெல்லியதாக்கி விட்டோம் என நினைக்கிறேன். எனவே, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவற்றுக்குதான் முன்னணி புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக பண மோசடி மற்றும் ஊழலை விசாரிக்க வேண்டிய CBI அமைப்பு, இஷ்டத்துக்கு பல வழக்குகளையும் துப்பு துலக்க அழைக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்"என்று கூறினார். இது அவர் பாஜக அரசை மறைமுகமாக விமர்சித்ததாக கருதப்படுகிறது.