Politics
மதுபான வழக்கு : டெல்லி முதல்வர் கைதை தொடர்ந்து அமைச்சருக்கு சம்மன் அனுப்பிய ED - குவியும் கண்டனங்கள்!
பாஜக ஆளாத மாநிலங்களில் தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி வருகிறது பாஜக. மேலும் பாஜக ஆளாத மாநிலங்களின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர்கள் என பலருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது. அதோடு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தொல்லை செய்து வருகிறது.
அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்தது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆந்திராவின் YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஸ்ரீனிவாசலூ ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரித்தது. தொடர்ந்து அவரது மகன் ராகவா மகுந்தா ரெட்டி நடத்தும் பாலாஜி டிஸ்லரிஸ் நெல்லூர், டெல்லி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராகவா கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே விசாரணையில் ராகவாவின் வாக்குமூலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரும் இருந்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ஒரு பக்கம், சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மறுபக்கம் பாஜகவில் சேருவதற்கு பேரம் பேசப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலேயே மணீஷ் கைது செய்யப்பட்டார். இவரைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து 9 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை கெஜ்ரிவால் நிராகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் தற்போது வரை இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி போக்குவரத்துறை அமைச்சராக இருக்கும் கைலாஷ் கெலாட்டுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் தற்போது மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதோடு, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ரெட்டியின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-வுமான கவிதாவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!