Politics
உ.பி. சிறையில் ரௌடி அன்சாரி மரணம் : பாஜக MLA கொலைக்கு பழி வாங்கலா? - பின்னணி என்ன?
உத்தர பிரதேசத்தில் பிரபல ரௌடியும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி பாஜக எம்.எல்.ஏ-வை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் நேற்று இரவு இவர் கழிவறை சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இவர் சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு, அங்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், முக்கிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்சாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து வரும் நிலையில், உ.பியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு அவரது உறவினர்களுக்கு சோகத்தை கொடுக்கும் அதே வேளையில், உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏ., கிருஷ்ணானந்த் ராய் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
'இது அன்சாரி செய்த பாவங்களுக்கான தண்டனை' என்றும், 'ஹோலி பரிசு' என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறையில் ஒரு குற்றவாளி மரணம் அடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உ.பி எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ், “சிறை கைதி சிறையிலே மரணமடைந்துள்ளது உ.பி அரசின் சட்டம் மிகவும் மோசமாக உள்ளதை எடுத்துரைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் காங்கிரஸ், இது ஒரு நிறுவன கொலை என்று குறிப்பிட்டு மேற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து அன்சாரியின் மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பும் நிலையில், அங்கே மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமாக காணப்படுகிறது.
யார் இந்த முக்தார் அன்சாரி ?
உத்தர பிரதேசத்தில் பிரபல தாதாவாக அறியப்படுபவர் முக்தார் அன்சாரி. இவரது தாத்தா, அப்பா ஆகியோர் அரசியலில் சிறந்து விளங்கிய நிலையில், இவரும் அரசியலில் கால்பதிக்க எண்ணினார். 90-களில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1996-ம் ஆண்டு மௌ (Mau) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது வெற்றி பெற்ற இவர், அக்கட்சியில் இருந்து விலகி அடுத்தடுத்து 2 முறை அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து Quami Ekta Dal என்ற கட்சியில் இணைந்து போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ-வான நிலையில், அதற்கடுத்து மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரே தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார் முக்தார் அன்சாரி. 2022-ம் ஆண்டு அதிலிருந்து விலகி பாஜகவின் NDA கூட்டணியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியில் இணைந்தார். முக்தார் அன்சாரி மீது கொலை, மிரட்டல், கொள்ளை, கடத்தல் என சுமார் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அன்சாரியும் - பாஜக MLA கிருஷ்ணானந்த் ராயும் :
கடந்த 2001-ம் ஆண்டு அன்சாரியின் வாகனத்தை மறித்த சில கும்பல், அவர் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் இருந்து உயிர் தப்பிய அன்சாரி, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரித்தார். அப்போது இதன் பின்னணியில் பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராய் இருப்பது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணானந்த் ராயை கொலை செய்ய திட்டமிட்ட அன்சாரியும், அவரது சகோதரர் அஃப்சால் அன்சாரி ஆகியோர் கடந்த 2005, ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணானந்த் ராயை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை, அன்சாரியின் அடியாளான முன்னா பஜ்ரங்கி நடத்தினார். இதில் ராய் மீது 67 குண்டுகள் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு 2006-ம் ஆண்டு CBI-க்கு மாற்றப்பட்டு, அப்போது இது தொடர்பாக முக்தார் அன்சாரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லை என்று, அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் இப்போது உயிருடன் இல்லை.
அன்சாரியின் அடியாள், முன்னா பஜ்ரங்கி கடந்த 2018-ம் ஆண்டு பக்பத் சிறையில் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ராகேஷ் (எ) ஹனுமன் கடந்த 2020-ம் ஆண்டு போலிஸ் என்கவுண்டரில் ர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான சஞ்சீவ் ஜீவா, லக்னோ நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். தற்போது முக்கிய குற்றவாளியான முக்தார் அன்சாரி, சிறையில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த ராய் போட்டியிட்டு வெற்றிபெற்ற முகமதுபாத் தொகுதியில், முக்தார் அன்சாரியின் சகோதரர் அஃப்சில் அன்சாரிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால் 2002-ம் ஆண்டு ராய் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக :
2005 நவம்பர் - பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராய் வாரனாசி அருகே சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
2005 டிசம்பர் - பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு மாநில போலிஸிடம் இருந்து CB-CIDக்கு மாற்றப்பட்டது.
2006 ஜனவரி - CB-CID இடமிருந்து மீண்டும் மாநில போலிஸிடம் வந்தது.
2006 பிப்ரவரி - இதுகுறித்து அஃப்சால், முன்னா, ரஹ்மான் ஆகிய 3 பேர் மீது வழகுப்பதிவு செய்யப்பட்டது.
2006 மார்ச் - இதில் முக்தார் அன்சாரியும் குற்றவாளி என சேர்க்கப்பட்டது.
2019 ஜூலை : தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு 2019-ம் ஆண்டு போதிய ஆதாரம் இல்லை என்று CB-CID நீதிமன்றம் விடுதலை செய்தது.
2023 - இந்த வழக்கு மீண்டும் நடைபெற்று முக்தார் அன்சாரிக்கு சிறை தண்டனை கிடைத்தது.
2024-ம் ஆண்டு முக்தார் அன்சாரி சிறையில் வைத்து உயிரிழந்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?