Politics

நீங்கள் செய்த பாவங்களுக்காக எங்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்- மோடியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுதந்திரமாக செயல்படவேண்டிய புலனாய்வு அமைப்புகளை தங்கள் கட்சியின் மற்றொரு அணி போல மாற்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை போன்ற அரசின் துறைகள் அனைத்தும் பாஜக ஆதரவோடு இயங்கி வருகின்றன.

புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. நீதிபதிகள் நியமனத்தில் அரசு முடிவெடுக்கும்பொருட்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை பாஜக அரசு கொண்டுவந்தது.

ஆனால், இதனை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதினர். அதில் அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்க வேண்டுமாறு கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதித்துறையில் காங்கிரஸ் அரசு தலையிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், நீங்கள் செய்த பாவங்களுக்காக காங்கிரஸ் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள் என மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்ட அவர்,

" காங்கிரஸ் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள் !

பிரதமர் மோடி அவர்களே...

1. உங்கள் ஆட்சியின்போது 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஜனநாயகத்தின் அழிவு குறித்து எச்சரித்தார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2. மக்களவைத் தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை வேட்பாளராக நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள்.

3. உங்கள் ஆட்சியில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) கொண்டு வந்தீர்கள். அது ஏன் உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது?

நீங்கள் செய்த பாவங்களுக்காக காங்கிரஸ் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். அரசியலமைப்பை புண்படுத்தும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்!" என்று கூறியுள்ளார்.

Also Read: உ.பி. சிறையில் ரௌடி அன்சாரி மரணம் : பாஜக MLA கொலைக்கு பழி வாங்கலா? - பின்னணி என்ன?