Politics

மகாராஷ்டிராவை கைப்பற்ற திட்டமிடும் பா.ஜ.க! : குழம்பிப்போன மாநில கட்சிகள்!

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல், சற்று குழப்பத்திற்குரிய வகையிலேயே அமைந்துள்ளது.

காரணம், தேசிய கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை தவிர்த்து, மற்ற இரு பெரும் மாநில கட்சிகளான சிவசேனா - சிவசேனா (UBT) மற்றும் சிவசேனா (ஷிண்டே) என்றும்; தேசியவாத காங்கிரஸ் கட்சி - NCP மற்றும் NCP (SP) என்றும் பிளக்கப்பட்டுள்ளது.

பிளக்கப்பட்டதற்கு, இரண்டக வேலை செய்த பா.ஜ.க.வின் பங்கு முக்கியமானது. எனினும், பிளக்கப்பட்ட கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பா.ஜ.க.வின் பக்கமே இணைந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் கூட்டணியை விரும்பிய சிவசேனா (ஷிண்டே) மற்றும் NCP, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் வழி, தங்களிடம் இருக்கின்ற பிரதிநிதித்துவத்தையும், மக்கள் செல்வாக்கையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதில் முதன்மையாக, சிவசேனா (ஷிண்டே) கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா பெற இருந்த முதலீடுகள் குஜராத்திற்கு தாரைவார்ப்பது, சிவசேனா கட்சி நிர்வாகிகளை புறக்கணிப்பது போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால், மக்களின் செல்வாக்கு மற்றும் கட்சி நிர்வாகிகளின் செல்வாக்குகளை இழந்து வருகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட, சிவசேனா (ஷிண்டே) கட்சியின் நடப்பு MP-க்களை விட, குறைவான தொகுதிகளையே பா.ஜ.க ஒதுக்க திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதிலும், இந்தியாவின் முக்கிய நகரமாக விளங்கும் மும்பையின் 6 தொகுதிகளில், 2 தொகுதிகளே சிவசேனா (ஷிண்டே) கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சிவசேனா (ஷிண்டே) கட்சியின் நிலையை விட மோசமான நிலையில் தான், பா.ஜ.க கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான NCP கட்சி அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஷிண்டே மற்றும் NCP கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். கட்சியின் தலைமை, தங்களின் சுயநலனுக்காக, கட்சியை விரயமாக்கியுள்ளனர் என கண்டனங்களும் எழத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க கூட்டணிக்கு இடையிலான மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கான பங்கீடு, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உலக நாடுகளிடமிருந்து விமர்சனங்களை பெறும் ஒன்றிய பா.ஜ.க! : தடுமாறும் பாசிசக்காரர்கள்!