Politics

ஆட்சியின் கடைசி நேரத்திலும் அதானிக்காக உழைக்கும் மோடி : ஒடிசா துறைமுகத்தை கைப்பற்றிய அதானி குழுமம் !

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியின்போது சாதாரண தொழிலதிபராக இருந்த குஜராத்தை சேர்ந்த அதானி தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். இதற்கு பிரதமர் மோடியுடன் அவருக்கு இருந்த தொடர்பே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது மோடியின் பிரச்சாரத்துக்காக தனி விமானத்தையே வழங்கிய அதானி, மோடி பிரதமரான பின்னர் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கும் மோடியுடனே சென்றார். இதன் மூலம் பல நாடுகளில் ஏராளமான ஒப்பந்தங்கள் அதானிக்கு கிடைத்தது.

இதன் மூலம் குறுகிய காலத்தில் அதானி மிகப்பெரும் பணக்காரராக உருவெடுத்தார். அதானியின் கடன்கள் அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அரசு நிறுவனங்களும், வளங்களும் குறைந்த விலைக்கு அதானிக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது பாஜகவின் 10 ஆண்டு ஆட்சி முடியவுள்ள நிலையில், ஒடிசா மாநிலம் கோபால்பூர் துறைமுகத்தின் 95 சதவீத பங்குகள் அதானியின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரும்புத் தாது, நிலக்கரி, சுண்ணாம்பு உள்ளிட்ட மொத்த சரக்குகளைக் ஒடிசா மாநிலம் கோபால்பூர் துறைமுகம் கையாண்டு வருகிறது.

இந்த துறைமுகத்தின் 95 சதவீத பங்குகளை, மூன்றாயிரத்து 80 கோடி ரூபாய்க்கு அதானி நிறுவனம் தற்ப்போது தனதாக்கியுள்ளது. கோபால்பூர் துறைமுகத்தின் 56 சதவீத பங்குகளை எஸ்பி குழுமத்திடமிருந்தும், 39 சதவீத பங்குகளை ஒடிசா ஸ்டீவடோரஸ் நிறுவனத்திடமிருந்தும் அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே குஜராத் மாநிலம் முந்திரா துறைமுகம் உட்பட நாடு முழுவதும் சுமார் 15 துறைமுகங்கள் அதானி வசம் உள்ள நிலையில், தற்போது, கோபால்பூர் துறைமுகத்தையும் அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே, ஆட்சியின் கடைசி நேரத்திலும் அதானிக்கு சாதகமாக ஒன்றிய மோடி அரசு செயல்பட்டு, தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Also Read: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.466 கோடியை கொடுத்தது யார் ? பாஜகவின் ஊழலை மறைக்கும் SBI !