Politics

கடந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்த ஊழல்கள் : பட்டியலிட்டு விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

இந்தியா கூட்டணி சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதி பெரியகுளம் பகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக கழக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், நீங்கள் மட்டும் இந்த முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை வெற்றி பெற வைத்தால் மாதம் இரண்டு முறை தேனி மாவட்டத்திற்கு வந்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்தார். கடந்த 2019 ஆண்டு தேர்தலில் தேனி மாவட்ட மக்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தேனி தொகுதியை மட்டும் இழந்து விட்டோம். இந்த முறை அப்படியே ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தலைப்பே மாநில உரிமைகளை மீட்கும் தலைவரின் குரல் என வைத்துள்ளோம். ஏனென்றால் அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்து விட்டார்கள். கல்வி உரிமையை பறித்து விட்டார்கள்.

ஒன்றிய பாரதிய ஜனதா அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பல்வேறு ஊழல் செய்துள்ளது. சிஏஜி எனும் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏழரை லட்சம் கோடிக்கு செலவு செய்வதற்கான கணக்கு இல்லை என்றும் ஒரு கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிஎம் கேர் பண்ட் அதில் வந்துள்ள 36,000 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை என குற்றம் சாட்டினர். நம்முடைய தலைவர் சொல்வதை தான் செய்வார் செய்வது தான் சொல்வார்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை நிச்சயமாக ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளோம் என்றார். சுங்கச்சாவடி முற்றிலும் அகற்றப்படும், கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் ஆக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம், பெட்ரோல் விலை 75 ரூபாயும் டீசல் விலை 65 ரூபாயும் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 483 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். எதையெல்லாம் செய்யவே முடியாது என திட்டமிட்டு போய் பிரச்சாரம் செய்தனர். ஆனால் நமது முதலமைச்சர் சொன்னதை செய்தார்.

தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு அரசு செய்த சாதனைகளை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் சிலை லண்டனில் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது. போடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டின் கீழ் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 250 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 162.43 லட்சம் கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது அதேபோல் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர இதய அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய் வலி நிவாரண சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்கரை பேரூராட்சியில் ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதெல்லாம் தமிழ்நாடு அரசு செய்து முடித்தது.

நம் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். பேபி அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், வாழை மற்றும் திராட்சைக்கான மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்கப்படும், போடியில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும், திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும். மோடி இல்லாமல் கூட விமானத்தில் பயணம் செய்வார் ஆனால் அதானி இல்லாமல் பயணம் செய்ய மாட்டார் அதான் நீ உலகத்தில் இரண்டாவது பணக்காரராக வலம் வருகிறார் இந்தியாவில் அதானி ரயில் நிலையம் அதானி துறைமுகம், இப்படி எல்லாத்தையும் அதானியிடம் அடகு வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். இதெல்லாம் தட்டிக்கேட்க வேண்டும் என்றால் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் இடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அடுத்த 24 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என்றார்.

Also Read: ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றால் பாஜக இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !