Politics

“ஊழல்கள், உச்சநீதிமன்றத்தின் குட்டுகளோடு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் பா.ஜ.க.” : கி.வீரமணி விமர்சனம் !

தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊழல் கறைபடிந்த - உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து குட்டு வாங்கிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட மலைக்கோட்டை நகரில் மகத்தான முழக்கமிட்டார் - தொடரட்டும் வெற்றிகள் - முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியைத் தந்த, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைப் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி வார்த்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் வழிகாட்டும் நெறி என்ற முப்பாலையும் குடித்து வளர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, கட்சி - ஆட்சி என்ற இரட்டைக் குதிரைகளையும் கட்டி - இந்தியாவும் - உலகமும் மெச்சத்தகுந்த கொள்கை ஆட்சி நடத்தி வரலாறு படைத்து வருகிறார் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

திராவிடர் இயக்கம் - 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூட - தொடங்கிய திட்டங்களும், நிறைவேற்றிய, நிறைவேற்றிடும் சட்டங்களும் தமிழ்நாட்டிற்கு மட்டும் என்பதல்ல; வழிகாட்டி வெளிச்சங்களாக இந்தியா முழுமைக்கானது என்பதால்தான் நமது முதலமைச்சர் பெரிதும் உழைத்து உருவாயிற்று ‘‘இந்தியா கூட்டணி!’’

இந்தியா கூட்டணியின் முன்னோடி நமது முதலமைச்சரின் முதல் தேர்தல் பரப்புரை - மலைக்கோட்டையில் மலைப்பிரசங்கம்! :

நமது ஜனநாயகத்தை எதேச்சதிகாரத்தின் கோரப்பிடியிலிருந்தும், மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறி என்ற மூவகை அபாயங்களிலிருந்தும் (கடந்த 10 ஆண்டுகளில்), அந்த அபாயம் எல்லை கடந்து, கண்டவரை கடித்துக் குதறும் அநியாய, ஆணவப் போக்கிற்கு முற்றுப்புள்ளியும் வைக்க, அமைதி அறவழி, வாக்களிப்புமூலம் ஆட்சி மாற்றம் என்ற தத்துவத்திற்கேற்ப, இந்தியா கூட்டணியில், பல எதிர்க்கட்சிகளும், பொது நோக்கோடு இணைந்து களம் காணும் நிலையில், அதன் கர்த்தாக்களில் ஒருவராக நமது முதலமைச்சர், தமிழ்நாட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி, தனது ஆட்சியின் தகத்தகாய ‘ஒளிமிக்க சாதனைகளை’ பெருமையோடு எடுத்து விளக்கி, கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், மக்கள் விரோத, அரசமைப்புச் சட்ட விரோத - சமத்துவ, சமூகநீதி, ஜனநாயக விரோத பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சியை அகற்றினால்தான், நாடும், மக்களும் உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் பெற முடியும் என்பதை விளக்கிட, தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை நேற்று (22-3-2024) தந்தை பெரியாரின் வாசத் தலைநகரமான திருச்சி - சிறுகனூரில் - ‘பெரியார் உலகம்‘ அருகே தொடங்கி, முழக்கமிட்டுக் கிளம்பி, மலைக்கோட்டையில் மலைப் பிரசங்கம் செய்தார்.

நோட்டாவைவிட குறைந்த வாக்குகளைப் பெறுவோர் எதிர் வரிசையில்!

லட்சோபலட்ச மக்கள் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சியமாகும்!

தமிழ்நாடு பி.ஜே.பி., அ.தி.மு.க., உள்பட பல கட்சித் தலைவர்கள் கூட்டணி அமைக்காதிருந்து, திறந்த கதவுகளை மூடாமலும், சிலர் கதவுகளையே கழற்றி வைத்திருந்தும்கூட அவர்களுடன் கூட்டணியில் செல்ல யாரும் முனையவில்லை; பிறகு பா.ஜ.க. தனி நபர்களையும், கட்சித் தலைவர்களையும் பிடித்து, ‘தாமரை’ சின்ன முத்திரையில் போட்டி, நோட்டாவைவிட அதிக ஓட்டு வாங்கிட என ஒரு புதுவகை யுத்தியுடன் இந்த ஜனநாயக அறப்போரில் களமிறங்கி உள்ளவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஊழல்கள், உச்சநீதிமன்றத்தின் குட்டுகள் - இந்தச் சுமையோடு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் பா.ஜ.க.! :

தாங்கள் முன்பு சொன்ன வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், கேரண்டீக்களையும் நீர் எழுத்துகளாக்கி, ஜூம்லாவாக்கிவிட்டவர்கள், அதிகார பலம், பண பலம், பத்திரிகை பலம், மேனாள் கிரிமினல்கள், இந்நாள் கிரிமினல்களின் பலத்தோடு வந்தாலும், அவர்களது முகமூடிகளை - தேர்தல் பத்திர ஊழல்கள், மற்ற மற்ற மெகா ஊழல்கள் அனைத்தும் அம்பலமாக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட அலங்கோல ஆணவம் உச்சநீதிமன்றத்தாலேயே வெளிப்படுத்தப்பட்ட நிலையில்தான், இந்தத் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகின்றது!

ஆளுநர் ஆர்.என்.இரவி பெற்ற அவமானம்! :

ஒரு சிறு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டு ஆளுநரான ஆர்.என்.இரவியின் தான்தோன்றித்தனத்தின்மீது உச்சநீதிமன்றம் கண்டனம் பாய்ந்தவுடன், ஆளுநர் ரவியே, பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை முதலில் மறுத்து - பின் மன்னிப்புக் கேட்டு, மறு அழைப்பு விடுத்து, தோல்வி முகத்தோடு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

டில்லி செங்கோட்டை ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியின்கீழ் வரும்! :

இது நம் முதலமைச்சர் பெற்ற வெற்றி - முதல் வெற்றி! அத்துடன்தான் அந்த ‘ராஜ்பவன்’ வெற்றியோடு திருச்சி நோக்கிய பரப்புரைப் பயணம் தொடங்கினார். முதல் வெற்றி முதலமைச்சருக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் - ‘‘மலைக்கோட்டை நகரின் அறைகூவல், டில்லி செங்கோட்டை இனி ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியின்கீழ் இருக்கும்‘’ என்று சொல்லாமற் சொல்லியது - வெல்லாமல் வென்று காட்டியுள்ளார்!

தொடரட்டும் வெற்றிகள்! வாழ்த்துகள் வெற்றி மலர்களாகும்!! முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி!! விடியட்டும் புதிய இந்தியா கூட்டணி ஆட்சி!!!

Also Read: நாடாளுமன்ற தேர்தல் : “2 முக்கிய மாநிலங்களில் போட்டியில் இருந்து பின்வாங்கிய பாஜக..” - காரணம் என்ன ?