Politics

கோவில்களுக்கு நிதி ஒதுக்காத உ.பி. பாஜக அரசு: அறநிலையத்துறை முக்கியத்துவத்தை உணர்த்திய உயர்நீதிமன்ற வழக்கு

தமிழ்நாட்டில் மன்னன் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அரசுக்கு சொந்தமான இந்து மற்றும் சமண மதத்தை சேர்ந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் அதிக வருமானம் பெரும் கோவில்களில் இருந்து பெறப்படும் நிதி வருமானம் குறைவாக உள்ள கோவில்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவில்களில் மேற்கொள்ளப்படும் பணிகளும் அறநிலையத் துறையின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலைபண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான கோவில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1,000-வது குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாறு தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்படும் நிலையில், பாஜக மற்றும் வலதுசாரிகள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்கவேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், அறநிலையத் துறை போன்ற அமைப்புகள் இல்லாத மாநிலங்களில் இருக்கும் கோவில்கள் போதிய நிதி இல்லாமல் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கிறார். இங்கு மாநில அரசு சார்பில் கோவில்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக கோவில்களுக்கு நிதி வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்தரபிரதேச அரசிடமிருந்து நிதி பெறுவதற்கு கோவில்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது வேதனையைத் தருவதாக கருத்து தெரிவித்தனர். மேலும், கோவில்களுக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாஜக அரசுக்கு அறிவுரை வழங்கினர். இந்த வழக்கின் மூலம் பாஜக ஆளும் மாநிலங்களில் கோவில்களுக்கு உரிய நிதியை வழங்காமல் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அறநிலையத்துறையின் அவசியத்தையும் இது போன்ற வழக்குகள் உணர்த்தியுள்ளது.

Also Read: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : விவரம் என்ன?