Politics

“ஒன்றிய அமைச்சரை NIA விசாரிக்க வேண்டும்” -குண்டு வெடிப்பில் தமிழர்களை பற்றி பேசியதற்கு முதல்வர் கண்டனம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தது.

எனினும் குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழர்கள்தான் வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளது தற்போது கண்டனங்களை வலுத்துள்ளது.

பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா (Shobha Karandlaje) இந்த நிகழ்வு குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான்” என்று பேசினார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ.க. இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவின் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்கவேண்டும், அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பா.ஜ.க.வின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்த ஷோபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரிலிருந்து தொண்டர்கள் வரை பா.ஜ.க.வில் இருக்கும் அனைவரும் இத்தகைய கேவலமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “ஒன்றிய அமைச்சரின் இந்த விஷமத்தனமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் போது, பாஜக அமைச்சருக்கு இவ்வளவு அபத்தமான கருத்தை தெரிவித்தது எப்படி?

பா.ஜ.க.வின் இந்த இழிவான பிரித்தாளும் அரசியல் தற்போது மேலும் தரம் தாழ்ந்து போயுள்ளது. பாஜகவின் கேவலமான பேச்சுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரிகளும் நிராகரிப்பார்கள். ஒன்றிய அமைச்சர் சோபாவை என்ஐஏ விசாரிக்க வேண்டும். நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: பெங்களூரு கஃபே : “தமிழர்தான் வெடிகுண்டு வைத்தார்” - ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!