Politics

பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்திய மோடி : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தென் மாநிலங்களில் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி ஆந்திராவிற்கு சென்றுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. ஆனால் பிரதமரோ, தனது பதவியை பயப்படுத்தி ஒரு நாட்டின் அரசு சொத்தை தனது கட்சி சார்ந்த பிரசார கூட்டத்துக்காக பயன்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஆந்திர மாநிலம், பல்நாடு சிலக்கலூரிப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள, இந்திய விமானப்படை (IAF) ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பிரசாரத்திற்கு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இந்த காரணத்திற்காக 1975-ல் இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது IAF ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததற்காக BJP பணம் செலுத்தியிருந்தால், IAF ஹெலிகாப்டர் ஏன் அவசியம் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். (முதலமைச்சர்கள் மற்றும் பிற Z+ பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட VVIP ஹெலிகாப்டர்கள் இருக்கிறது)

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு IAF ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் விசாரணை அல்லது நடவடிக்கை எடுக்குமா" என்று பார்ப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (17.03.2024) வெளியிட்டுள்ள இவரது பதிவில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் பரப்புரைக்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்துள்ளார். ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு விமானப்படைக்கு பாஜக பணம் செலுத்தியதா? ஆம் என்றால் அனைத்து வேட்பாளர்களும் ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் SBI வங்கி வெளியிட வேண்டும்"- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !