Politics

உதவி கேட்டு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : 81 வயதான பாஜக தலைவர் எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு பதிவு !

தென்மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இங்கு பாஜகவை வளர்த்ததில் எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அங்கு பாஜக சார்பில் 4 முறை முதலமைச்சராக எடியூரப்பா இருந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் ஒதுக்கி தள்ளியது. இதனால் தனி கட்சி ஆரம்பித்த அவர் பின்னர், தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இதன் காரணமாக பாஜகவில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். எடியூரப்பாவின் இரு மகன்களும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி சிறுமியின் பெற்றோர் ஒரு உதவியை கேட்டு பெங்களூரின் சதாசிவநகரில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச்சென்று எடியூரப்பா சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக சதாசிவ நகர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் முக்கிய தலைவரான எடியூரப்பா மீது பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Also Read: பெட்ரோல் விலையின் மர்மத்தை மக்களுக்கு விளக்கமளிப்பாரா பிரதமர்? : அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!