Politics

நாடாளுமன்ற தேர்தல் 2024 : மதுரை, திண்டுக்கல் வேட்பாளர்களை அறிவித்தது CPIM கட்சி! - யார் அவர்கள்?

இந்தியாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாகியுள்ளது.

இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து றுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

அதன்படி,

1. தி.மு.க. (DMK) - 21

2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)

3. ம.தி.மு.க. (MDMK) - 1

4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2

5. சி.பி.ஐ. (CPI) - 2

6. வி.சி.க. (VCK) - 2

7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1

8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1

- என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சி.பி.ஐ.(எம்)-க்கு திண்டுக்கல், மதுரை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்படி மதுரையில் - தற்போது இருக்கும் எம்.பி-யான சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடவுள்ளார். மேலும் திண்டுக்கல்லில் - சச்சிதானந்தம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “18-வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., அவர்களையும்,

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களையும், வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

முன்னதாக,

* IUML - இராமநாதபுரம் தொகுதி

* KMDK - நாமக்கல் தொகுதி

* VCK - விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட ஆல்பா எண்ணை வெளியிடாதது ஏன் ? - SBI மீது நீதிபதி சந்திரசூட் அதிருப்தி !