Politics
தேர்தல் பத்திர விவகாரம் : காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் - SBI தீர்ப்பின் முழு விவரம்!
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தேர்தல் பத்திரங்களை வாங்கி, தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். மேலும் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தேர்தல் பத்திரங்களை வாக்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இருக்காது. இந்த பத்திரங்களை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இதனாலே இந்த தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சாதமாக மட்டுமே இருக்கிறது.
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளும் (2022 வரை) பாஜக மட்டும் சுமார் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியிலிருந்து 58% ஆகும். எனவே தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 15-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வருமாறு :
"தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் கடந்த 26 நாட்களாக எஸ்.பி.ஐ என்ன செய்துகொண்டிருந்தது? கடந்த 26 நாட்களில் 10,000 தகவல்களையாவது சேகரித்திருக்கலாமே? நாட்டின் மிகப்பெரிய வங்கியால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை விரைவில் சேகரித்து வழங்க இயலாதா? 2019ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது, sealed cover-ல் வழங்கப்பட்ட ஆவணங்களை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டியது தானே? தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், தீர்ப்பில் கூறப்பட்டதை அப்படியே செயல்படுத்த வேண்டியதுதானே?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது.
தொடர்ந்து, "தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் (12.03.2024) தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் தயாராக உள்ள நிலையில், உடனடியாக வெளியிட வேண்டும்" என்று கூறி SBI தொடர்ந்த கால அவகாசம் நீட்டிப்பு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!