Politics
"பாஜக நம்பிக்கை துரோகம் செய்து, எங்கள் கழுத்தை அறுக்கிறது" - சிவசேனா (ஷிண்டே) பிரிவு தலைவர்கள் புலம்பல்!
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது. இதனிடையே தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தன்னை நம்பி வந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகினறனர்.
மஹாராஷ்டிராவில் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு சிவசேனாவுக்கு 8 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்துள்ளது. தற்போது சிவசேனா(ஷிண்டே) பிரிவில் மட்டும் 14 எம்.பிக்கள் இருக்கும் நிலையில், பாஜக தங்களை ஏமாற்றுகிறது என அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக பேசியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய சிவசேனா(ஷிண்டே) பிரிவு அமைச்சர் ராம்தாஸ் கதம், "சிவசேனாவுக்கு பா.ஜ.க துரோகம் செய்கிறது.நாங்கள் பிரதமர் மோடி, அமித் ஷாவை நம்பித்தான் வந்தோம். ஒவ்வொருவரும் தங்களது கட்சி வளரவேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதற்காக உங்களை நம்பியவர்களை கழுத்தை அறுக்காதீர்கள். எங்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்தால் எதிர்காலத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்ப மாட்டார்கள்.மஹாராஷ்டிராவில் பா.ஜ.க மோசமான அரசியல் செய்கிறது" என்று விமர்சித்துள்ளார்.
அதே நேரம் மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதிகள் ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜகவோடு கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழித்து வரும் நிலையில், தற்போது அதில் சிவசேனா(ஷிண்டே) பிரிவும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) பிரிவும் சேர்ந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!