Politics

பா.ஜ.க மற்றும் அமலாக்கத்துறையின் கூட்டு அம்பலம் : உண்மையை புட்டு புட்டு வைத்த டெல்லி முதலமைச்சர்!

பா.ஜ.கவில் தாம் இணைந்துவிட்டால் அமலாக்கத்துறையில் இருந்து தமக்கு அனுப்பப்படும் சம்மன் உடனே நிறுத்தப்பட்டுவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில்,"அமலாக்கத்துறை மூலம் துன்பப்படுத்தப்பட்டு பலர் பா.ஜ.க.,வுக்கு இழுக்கப்படுகிறார்கள். அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு நடத்தப்படும் விசாரணையின்போது, சம்பந்தப்பட்டவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு செல்ல போகிறீர்கள் என்பதுதான். அதாவது, நீங்கள் பா.ஜ.க.,வுக்கு செல்ல போகிறீர்களா அல்லது சிறைக்கு செல்ல போகிறீர்களா என்பதுதான் அந்த கேள்வி என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வில் இணைவதாக அவர்கள் தெரிவித்துவிட்டால் உடனே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒருவேளை பா.ஜ.க.,வில் இணைய மாட்டோம் என்று தெரிவித்துவிட்டால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்கள்தான் பா.ஜ.க.,வுக்கு செல்வார்களே தவிர, குற்றம் செய்யாதவர்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறையில் இருக்கும் தமது கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் சிங் ஜெயின் உள்ளிட்டோர் பா.ஜ.க.,வில் இணைவதாக அறிவித்துவிட்டால் இன்றைக்கே அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் விமர்சித்துள்ளார்.

அதோடு, எந்த குற்றமும் செய்யாமலும், பா.ஜ.க.,வில் இணையாமலும் உள்ளதால்தான் அவர்கள் தற்போது வரை சிறையில் இருக்கிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். தாம் கூட பா.ஜ.க.,வில் இணைவதாக அறிவித்தால், தமக்கு அனுப்பப்படும் அமலாக்கத்துறையின் சம்மன் உடனே நிறுத்தப்படும் என்றும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்றும் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த டப்பாஸ் ராய் வீட்டில் ஜனவரி மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதாகவும், மார்ச் மாதத்தில் பா.ஜ.க.,வில் அவர் இணைந்தவுடன் அவர் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பா.ஜ.க., எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பது நன்கு தெரிகிறது என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ”மோடி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது” : கோவி செழியன் அதிரடி பேச்சு!