Politics

“ஜம்மு - காஷ்மீர் மக்களின் வளர்ச்சி பற்றி பா.ஜ.க.விற்கு கவலையில்லை” : மோடி வருகையை ஒட்டி PDP விமர்சனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, சிறப்புரிமை சட்டம் - 370 நீக்கப்பட்டதற்கு பின், முதன் முறையாக இன்று (07.03.24) ஜம்மு - காஷ்மீருக்கு வருகை தந்திருக்கிறார் பிரதமர் மோடி.

புல்வாமா சிக்கல், ஜம்மு - காஷ்மீர் மாநில ஆட்சி கலைப்பு என்ற எண்ணற்ற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக ஒன்றிய பா.ஜ.க திகழ்வதால், பிரதமர் மோடியின் இந்த வருகை கூடுதல் கவனம் ஈர்த்திருக்கிறது.

வருகையின் போது, மக்களிடம் எதிர்ப்புகளை சந்திக்காத வண்ணம், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதிகம் இருக்கிற ‘ஸ்ரீநகரை’, தங்கள் களமாகவும் மாற்றியிருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா, தனது X-தள பக்கத்தில், “மோடியின் அரசியல் வருகையில் கூட்டத்தை காண்பிப்பதற்காக தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஆயிரக்கணக்கில் தொகை தரப்பட்டு, பா.ஜ.க.வின் பேரணியில் கலந்துகொள்ளுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் சுகைல் புக்கரி, “ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சிக்கல் என்னவென்று கூட பா.ஜ.க.விற்கு தெரியாது. எங்கள் மக்களின் அடிப்படை தேவை என்பது புதிய கட்டுமான வளர்ச்சிகள் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும், முன்னேற்றமும் பாதுகாக்கப்படுவதே. ஆனால், அதனை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களிடம் துளியும் இல்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலுக்கு இடையில், பிரதமர் மோடி வருகையால், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வையும் ஒத்திவைத்துள்ளது அம்மாநில அரசு.

கல்விக்கு முன்னுரிமை தரும் அரசு, புதிய கல்விக் கொள்கையின் வழி நாட்டில் கல்வி நிலை மேம்படும், தேசிய அளவில் ஒரே தேர்வு முறை என கல்விக்கே முன்னோடிகள் நாங்கள் தான் என்று பொய் பரப்பலில் ஈடுபடும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தங்கள் அரசியல் வருகைக்காக குழந்தைகளின் தேர்வுகளை ஒத்திவைத்திருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது.

தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக, இது போன்ற பா.ஜ.க.வின் அனைத்து நாடகங்களையும், தேசிய ஊடகங்கள் கொண்டு திரிக்கும் செயல், பாசிசக் கொடி பறப்பதற்கு சான்றாய் அமைந்துள்ளது.

Also Read: UAPA சட்டத்தால், பாசிச அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க : தவறுகளுக்கு தீர்வு காணும் இடத்தில் நீதிமன்றங்கள்!