Politics

தேர்தல் பத்திரங்கள் வழக்கு : SBI -க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... பின்னணி என்ன ?

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். மேலும் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ரூ.1000 முதல் ரூ. 1 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம் தேர்தல் பத்திரங்களை வாக்குபவர் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இந்த பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இப்படியான சிக்கலும் இந்த தேர்தல் பத்திரத்திலிருந்தது.

இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். இதன் காரணமாக தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர்.

இதனிடையே இரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இந்த விவரங்களை வெளியிடுவதில் இருந்து தவிர்க்கவே எஸ்.பி.ஐ இதுபோன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாக இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்.பி.ஐ-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான முன்னர் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களில் ஒன்றான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை மீறியுள்ள எஸ்.பி.ஐ-யின் இந்த செயல் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மறுப்பது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை வேண்டுமென்றே குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது" என்று கூறியுள்ளது. அதோடு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read: ‘ஐரிஸ்’ : AI செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப்படுத்திய கேரள பள்ளி : வீடியோ காட்சிகள் வைரல் !