Politics

தண்ணீரில் வடை சுடும் பிரதமர்... 7 முறை வந்தும் மக்களை பார்க்காதவர்- மோடியை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி 54ஆவது வட்ட கழகம் சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா சூரியச்சுடர்-42 சமூகநீதி முதல்வரின் அடித்தளம், தமிழ்நாடு அவரால் உயர்ந்திடும் என்ற தலைப்பில் கொண்டிதோப்பில் 271 கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "பெரும் வெள்ளத்தில் துன்பப்படுகின்ற மக்களின் கரத்தை காப்பாற்றுகின்ற கரமாக நம்முடைய முதலமைச்சர் கரம் துடித்ததை அனைவரும் அறிந்ததே. ஒன்றிய அரசிடம் பலமுறை கூறியும் இதுவரை ஒரு ரூபாயைக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை...

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு மட்டும் பிரதமர் மோடி 7 முறை வந்து சென்றிருக்கிறார். ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. எண்ணெயில் வடை சுட்டு பார்த்திருப்போம், ஆனால் வெறும் தண்ணீரில் வடை சுடுகின்ற பிரதமர் என்பதை இன்று நாட்டு மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து இயல்பு நிலைக்கு தமிழ்நாட்டை திருப்பியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மட்டுமல்ல தெலுங்கானாவில் சென்றாலும் கூட திமுகவைப் பற்றி தான் பேசுகிறார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி தான் பேசுகிறார். தமிழகத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் இருக்கின்ற ஒரு டஜனுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர் குறிவைத்து தாக்குவது திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்னவென்றால் உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான். தமிழ்நாட்டிற்கு மோடி வருகிறார் என்றால் வயிற்றில் புளிக்கரைத்திருப்பது பிரதமருக்கு தானே தவிர திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது.இப்படிப்பட்ட மிரட்டல் அச்சுறுத்தல்கள் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகமடைகிறது. மேலும் விரைவாக பணிகளை ஆற்ற துவங்குகிறது...

பிரதமர் மோடி அவர்களே, தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வாருங்கள், திமுக மீது பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசுங்கள், மிரட்டி பாருங்கள். எப்படி அடிக்க அடிக்க பந்து எழுமோ, எப்படி காய்ச்ச காய்ச்ச தங்கம் சொக்கத்தங்கம் ஆகுமோ, எப்படி தீட்ட தீட்ட வைரம் ஒளி வீசுமோ, அது போல் நீங்கள் மிரட்ட மிரட்ட, திமுக இன்னும் வேகமாக களத்தில் நிற்கும்" என்று கூறினார்.

Also Read: தமிழ்நாடு வந்த மோடி தேர்தலுக்காக கூட நிவாரணத்தொகை தருவதாக சொல்லவில்லை - முரசொலி விமர்சனம் !