Politics
அரசின் புலனாய்வு அமைப்புகளை வைத்து கட்சிக்கு மாமூல் திரட்டிய பாஜக : அம்பலமான உண்மைகள்... - முரசொலி !
முரசொலி தலையங்கம் (27.2.2024)
வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் அமைப்புகள்
புலனாய்வு அமைப்புகளை தனது வேட்டைக்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு மழுப்பல் பதில்களையே பா.ஜ.க. சொல்லி வந்தது. ஆனால் இப்போது அம்பலம் ஆகி இருக்கும் செய்திகள், அந்தக் குற்றச்சாட்டுகள் நூறு விழுக்காடு உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உள்ளான பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகள் பல்வேறு நிறுவனங் களில் சோதனை மேற்கொண்டதாகவும், இந்தச் சோதனைகளுக்குப் பிறகு 30 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. சோதனைகள் மூலம் பல நிறுவனங்கள் பா.ஜ.க. அரசால் மிரட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், இது அப்பட்டமான மாமூல் வசூல் என தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுக்குக் கிடைத்த நன்கொடை குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. சோதனைக்குப் பிறகு பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு பக்கம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூல், மற்றொரு பக்கம் சோதனைகள் நடத்தி பிளாக்மெயில் செய்து பா.ஜ.க. வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை ஆகிய 3 அமைப்புகளும் பா.ஜ.க.வால் முறைகேடாக பயன்படுத்தப்படுவ தாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். ஒன்றிய பா.ஜ. அரசு கடந்த 2018–ம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துவிட்டு அதற்கு கைமாறாக பிரதிபலன் எதிர்ப்பார்க்க வாய்ப்பு உள்ளது என்றும், யார் நிதி அளித்தது என்ற விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் இருப்பதையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
நிதி தந்தவர்கள், அதை பெற்றுக் கொண்ட கட்சிகள் பற்றிய விவரங்களை மார்ச் 13 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் அதிகபட்ச நிதியைப் பெற்றது பா.ஜ.க. அந்த கட்சிக்கு மட்டும் கடந்த 2017--–------18 முதல் 2022-–23ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6,570 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருந்தது. அந்த கால கட்டத்தில் விற்பனையான தேர்தல் பத்திரங்களில் 60 சதவீதம் பா.ஜ.வுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவை உண்மையாக வழங்கப்பட்ட நிதிகள் அல்ல என்பது அம்பலம் ஆகி உள்ளது. தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை (ஈ.டி.), வருமான வரித்துறை (ஐ.டி.), சி.பி.ஐ.யை ஏவி அந்த நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.வுக்கு தேர்தல் நிதி பெறப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
2018-–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரையிலான தேர்தல் ஆணைய ஆவணங்கள், வழக்கு விவரங்கள், நிதி அறிக்கைகளை ஆய்வு செய்து இந்த தரவுகளை திரட்டிய அந்த இணையதளங்கள் அதனை அம்பலப்படுத்தி உள்ளன. “கடந்த 2018-–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரை பா.ஜ.வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்தியுள்ளது. இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பா.ஜ.வுக்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பா.ஜ.வுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை. ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பா.ஜ.வுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரூ.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு வாரி வழங்கி உள்ளன.
4 கம்பெனிகளில் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பா.ஜ.வுக்கு நிதி தந்துள்ளன. பா.ஜ.வுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.வுக்கு கொடுத்துள்ளன.
தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.வுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இப்படி 6 நிறுவனங்களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு நிதி தந்ததும் தெரிய வந்துள்ளது. நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளன” - – என்று அந்த ஆங்கில இணைய தளங்கள் விரிவாக எழுதி இருக்கின்றன.ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ.யைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி மிரட்டி பா.ஜ.வுக்கு தேர்தல் நிதி குவித்த விவகாரம் என்பது மாபெரும் நிதி மோசடியாகும். இதுதான் பா.ஜ.க.வின் உண்மை ஊழல்முகம் ஆகும். இதுதான் பா.ஜ.க.வின் மாடல் ஆகும். ஆட்சிகளை கவிழ்க்கவும் கட்சிகளை உடைக்கவும் இவைதான் பயன்படுத்தப்படுகிறது
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!