Politics

அனுமதியின்றி திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை: உள்ளூர் மக்கள் எதிர்ப்பு... பாஜக அமைச்சர் மீது கல் வீச்சு!

மராத்திய பேரரசை உருவாக்கிய சத்ரபதி சிவாஜிக்கு மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் சிலை அமைக்கப்பட்டுள்ளார். அவரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கோவா மாநிலத்தில் உள்ள சாவ் ஜோஸ் டி ஏரியல் என்ற கிராமத்தில் திடீரென தனியார் இடத்தில் சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோவாவில் குறைந்த அளவே மராத்திய மக்கள் வசிக்கும் நிலையில், சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த உள்ளூர் கிராமமக்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிவாஜியின் சிலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்த சூழலில் சிவாஜி ஆதரவாளர்கள் சிலர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடிய நிலையில், அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிலை வைக்க அனுமதி கேட்டு பஞ்சாயத்தில் கடிதம் கொடுக்கப்பட்ட போது அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே அந்த சிலை திறந்துவைக்க கோவாவை சேர்ந்த பாஜக அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் அங்கு வந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சிவாஜி சிலையை திறந்து வைத்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அமைச்சர் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் அமைச்சர் காயம் அடைந்த நிலையில், அவரை போலிஸார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் மகாராஷ்டிரா- கோவை இரு மாநிலங்களிலும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.