Politics

5 ஆண்டுகளாக விவாதமின்றி நிறைவேறிய 221 மசோதாக்கள் : நாடாளுமன்ற ஜனநாயகத்தை படுகொலை செய்த பா.ஜ.க.!

பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஜனநாயக விழுமியங்களோடு செயல்பட்டு வந்த பல அமைப்புகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. அதில் குறிப்பாக ஐந்தாண்டு திட்டம், திட்டக்குழு, GOM- அமைச்சர்கள் அடங்கிய குழு உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் பல அமைப்புகளை கலைத்துள்ளது. இனி எல்லாமே மோடி- அமித்ஷா கூட்டணி தான் என்று சொல்லாமல் பிரகடனப்படுத்துகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளத்திற்காக திட்டங்களை தீட்டும் இடமாகவும், பழமை வாய்ந்த நம் ஜனநாயகத்தின் கோயிலாகவும் திகழ்ந்த நமது நாடாளுமன்றத்தையே பா.ஜ.க சீரழித்தது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 93 இன் படி, புதிய ஆட்சி அமைக்கப்பட்ட உடனே, காலம் தாமதிக்காமல் மக்களவை தலைவரும், துணைத் தலைவரும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக துணைத் தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமலே சிறப்பு வாய்ந்த அந்த இருக்கையை காலியாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க.

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 146 நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சர்வாதிகார சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது மோடி அரசு.

அது மட்டுமல்ல வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைவான கூட்டத்தொடர்களை நடத்தி இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே அமர்வுகள் செயல்பட்டுள்ளன.

கேள்வி நேரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 60% நேரம் மட்டுமே அவை செயல்பாட்டில் இருந்தது.

இவ்வளவு குறுகிய காலமே நாடாளுமன்றம் செயல்பட்ட போதிலும், சுமார் 221 மசோதாக்களை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இவற்றில், 58% மசோதாக்கள் முன்மொழியப்பட்ட 2 நாட்களிலே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இப்படி அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில மசோதாக்களும் உள்ளன. குறிப்பாக மூன்று குற்றவியல் மசோதா, ஜம்மு காஷ்மீர் ஆட்சிமுறை மாற்றம் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் மிருக பலத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை உதாசினப்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதேயே தங்களின் சாதனையாக நிகழ்த்தி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு.

மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன் சாதக - பாதகங்களை ஆராய்வதற்கு பல குழுக்கள் அமைக்கப்படுவது இயல்பு. ஆனால், மோடி அரசு பதவியேற்றதற்கு பின் அவை எல்லாமே புறந்தள்ளப்பட்டன.

நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு ஒதுக்கப்படும் நேரமும், 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கணிசமாக குறைத்தது மோடி அரசு.

சர்வாதிகார ஆட்சியில் கூட யாரும் செய்ய துணியாத அளவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய 300 கேள்விகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியது மோடி அரசு.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கோட்பாட்டையே சிதைக்கும் அளவிற்கு ஒரு மதத்தின் அடையாளங்களோடு புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அதுவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல்.

உலக நாடுகளுக்கு முன் இந்தியர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியும் அளவிற்கு நாடாளுமன்ற அவையின் அரங்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இப்படி இவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் இந்த பத்தாண்டுகள் நெடுகிலும் ஜனநாயகத்தை எப்படி படுகொலை செய்ய பாஜக துடிக்கிறது என்ற சுவடுகளே பதிலாக இருக்கும்.

Also Read: சாவர்க்கருக்காக கட்டி முடிக்கப்படாத புதிய நாடாளுமன்றம் அவசரமாக திறக்கப்பட்டதா ?- CPM எம்.பி கேள்வி !