Politics

"மாநில உரிமைகளுக்காக அப்போது கர்ஜித்த மோடி, இப்போது மாநிலங்களை சிதைக்கிறார்" - முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (12.2.2024)

போராட்டம் நடத்தும் முதலமைச்சர்கள் --– 1

“கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். நேற்றைய தினம் கர்நாடக மாநில முதலமைச்சர் மாண்புமிகு சித்தராமையா அவர்களும் டெல்லிக்கு வருகை தந்து போராட்டம் நடத்தி இருக்கிறார். நிதி பகிர்வில் தங்கள் மாநிலத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.இதற்குக் காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை” -– என்று எச்சரிக்கை செய்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்து -– மாநிலங்களின் நிதி வளத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு சுரண்டி வருவதைக் கண்டித்து டெல்லி சென்று போராடி இருக்கிறார்கள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும். ஸ்பெயின் பயணத்தை முடித்து விட்டு வருகை தந்ததால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேரில் டெல்லி செல்ல முடியாத சூழல் இருந்தது. ஆனாலும் தனது வீடியோ பதிவு செய்யப்பட்ட உரையை அனுப்பி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். கேரளா அமைச்சரவை நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களும். இப்படி மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டங்கள் நடத்தியது இல்லை.

உரிய நிதிப்பங்கீடு அளிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களை போராட்டம் நடத்தும் நிலைமைக்குத் தள்ளி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஏழை எளிய நடுத்த மக்களை எல்லா வகையிலும் வஞ்சித்து வரும் பா.ஜ.க. அரசு, அந்த மக்களுக்கு நேரடி உதவிகள் செய்து வரும் மாநில அரசுகளையும் சுரண்டி வருகிறது.

மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை முறையாகச் செய்கிறதா என்றால் இல்லை.

மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநிலங்கள் கேட்கும் போதாவது நிதி தருகிறதா என்றால் இல்லை.

மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு,மாநிலங்களில் புதிய –- பெரிய திட்டங்களைத் தொடங்குகிறதா என்றால் இல்லை.

மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஒன்றிரண்டு தொடங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குகிறதா என்றால் இல்லை.

மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இயற்கை பேரிடர் நேரங்களிலாவது உதவி செய்கிறதா என்றால் இல்லை.

அப்படியானால் என்ன செய்கிறார்கள், மாநிலங்களிடம் அதிகப்படியான நிதி வளத்தை சுரண்டிச் செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அதை வைத்துத்தான் தனது அரசை நடத்துகிறது. பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இருக்கும் மாநிலங்களுக்கு அந்த நிதியை மடைமாற்றம் செய்கிறது. தனது சொந்த நிதியைப் போல பயன்படுத்திக் கொள்கிறது. மாநிலங்கள் பசியால் துடிப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

‘வலிமையான இந்தியாவுக்கு அடித்தளம் இட்டுள்ளேன்’ என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா என்ற உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால் அதன் உடல் உறுப்புகளான மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டாமா? காலும் கையும் பலவீனம் அடைய, இதயம் அடைக்க, தலையில் பெரும் காயங்கள் ஏற்பட –- முழு உடல் சுகமாக இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? அனைத்து உறுப்புகளையும் சிதைத்து விட்டு, முகத்துக்கு பவுடர் பூசிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார் பிரதமர்.

இத்தனைக்கும் அவர் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். 12 ஆண்டு காலம் இருந்தவர். முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். கர்ஜித்தவர். பிரதமர் ஆனதும், மாநிலங்களின் நன்மையை வலிமைப்படுத்தும் அரசாக தனது அரசு செயல்படும் என்று சொன்னவர் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் வந்ததும் மாநிலங்களைத் தான் சிதைத்தார். அழிக்கப் பார்க்கிறார்.

‘எங்களிடம் இருந்து அதிகமாக நிதி வசூல் செய்கிறீர்களே? எங்களுக்கு திருப்பித் தர மறுக்கிறீர்களே? குறைவாக நிதி தரும் மாநிலங்களுக்கு அதிகமாக பகிர்ந்தளிக்கிறீர்களே?’ என்று மாநிலங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. இதைச் சொன்னால் நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு என்கிறார் பிரதமர்.

மாநிலங்கள் அவையில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், மாநிலங்கள் பேசும் உரிமையை பிளவுபடுத்தும் பேச்சு என்கிறார். ‘நாட்டை ஒன்றாகப் பார்க்க வேண்டுமாம்’. தனித்தனியாகப் பார்க்கக் கூடாதாம். இதற்கு அவர் ஒரு உதாரணம் சொல்லி இருக்கிறார்.

“எங்களைப் பொறுத்தவரையில் நாடு என்பது வெறும் நிலமல்ல. அது மனித உடலைப் போன்றது. காலில் முள் குத்தி வலி ஏற்பட்டால் அந்த முள்ளை கை உடனே எடுக்கும். ‘காலில் தானே முள் இருகிறது. எனக்கு கவலையில்லை’ என கை நினைக்காது. அது போலவே நமது தேசமும்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

காலில் முள் குத்தினால் கை உடனே போய் எடுக்கும் என்பது மனித இயல்பு. இது பிரதமர் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. முள் குத்திய காலுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால் காலில் தானே செய்ய வேண்டும்? முழு உடம்பையே அறுவைச் சிகிச்சை செய்வார்களா? யார் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களை கவனிக்க வேண்டாமா?

ஏன் வேட்டி கட்டவில்லை என்று கேட்டால், தலைக்கு தொப்பி வைத்துள்ளேனே என்று சொல்வதைப் போல இருக்கிறது பிரதமர் மோடியின் பதில்.

-– தொடரும்

Also Read: மீண்டும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியை முற்றுகையிட கிளம்பிய விவசாயிகள்... சாலையில் ஆணி அடித்த பாஜக அரசு!