Politics

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற அரசியல் சாசனத்தை அழித்துவிட்டார்கள்" - கே. பாலகிருஷ்ணன் விமர்சனம் !

சிந்தனை சிற்பி சிங்காரவேலிரின் 78வது நினைவு நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய விடுதலை போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சிங்காரவேலன் நினைவு நாளில் அவரை நினைவு கூறுகிறோம். சிங்காரவேலன் விடுதலை போராட்டம் உள்ளிட்ட அனைத்துக்கும் போராடினார், மகத்தான தலைவர், கம்யூனிச கொள்கையை தமிழ்நாட்டில் பரப்பியதில் மூத்த தலைவர். மே தினத்தை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடியவர்.

இந்தியாவில் சாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது, மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலைமை உருவாகி இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று இந்த மதவெறி சக்திகள் கொக்கரிப்பது இந்திய நாட்டு மக்களுக்கு மிக ஆபத்தாக இருக்கும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற அரசியல் சாசனத்தை அழித்துவிட்டார்கள். இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்றுகின்ற பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாசப்படுத்தி விடுவார்கள்.அதை தமிழ்நாடு மக்கள் வீழ்த்த வேண்டும்...

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பெயர் சொல்லிக் கொள்வதற்கு கூட வாக்குகளை பெறுவதற்கு அருகதையற்ற நிலை இன்று உருவாகி இருக்கிறது. அண்ணாமலை பழைய இரும்பு சாமான் வியாபாரி போல் ஊர் ஊராக சென்று கூவி கூவி விற்றாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு முகவரி இருக்காது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றி பெறும். கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்கின்ற நிலைமை பாரதிய ஜனதாவிற்கு இல்லை. மக்களை பிளவுபடுத்துகின்ற வேலையில் ஈடுபட்டு இந்த நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பாஜக நினைக்கிறது. மோடி முகத்தை காட்டினால் ஓட்டு போட மாட்டார்கள் என்று ராமர் முகத்தை காட்டி ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் போட்டி சர்க்காரை இங்கு நடத்திக் கொண்டிருக்கிறார். பாஜகவால் தமிழ்நாட்டு மற்றும் கேரளாவில் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்காக ஆளுநரை வைத்தாவது ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள், அதற்கு ஆளுநர் கருவியாக பயன்படுகிறார். ஜேபி நட்டாவின் வருகை அண்ணாமலைக்கு வேண்டுமென்றால் பெரிய மாற்றத்தை தரலாம் தமிழ்நாட்டில் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.

பத்தாண்டு காலமாக ஆட்சியில் தராத பாரத ரத்னா விருதை தற்போது ஏன் தருகிறார்கள்? எம்.எஸ் சுவாமிநாதனின் கொள்கையை காலில் போட்டு மிதித்து விட்டார்கள் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது யாருக்காக? ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், திறப்பு விழாவிற்கும் அத்வானியை அழைக்கவில்லை. ஆறுதல் பரிசு மாதிரி அவருக்கு தற்போது பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளார்கள். இன்னும் சில பேருக்கு கூட பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவிக்கும். மாநிலக் கட்சிகளின் வலுவான செல்வாக்கை கொண்டுள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி" என்று கூறினார்.

Also Read: "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிலர் வதந்தி பரப்புகிறார்கள்"- அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு!