Politics

“மறைந்த கர்பூரி தாக்கூருக்கு விருது கொடுப்பதே இதற்காகதான்...” - மோடியை விமர்சித்த உத்தவ் தாக்கரே !

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றுதான் 'பாரத ரத்னா'. அந்த வகையில் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது யார் யாருக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2 நாட்களுக்கு அறிவித்திருந்தார். இந்த சூழலில் பாரத ரத்னா விருதை அறிவித்ததற்கான காரணம் வரும் தேர்தல்தான் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.

அதாவது, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான LK அத்வானி, பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, பீகார் மக்கள் ஓட்டுக்காகதான் மறைந்த கர்பூரி தாக்கூருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “முன்பெல்லாம் ஆண்டுக்கு எத்தனை பேருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தன.

ஆனால் இப்போது தனது மனதிற்கு தோன்றுபவர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா விருதை அறிவித்து வருகிறார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தல் வருவதால் பீகார் மக்களின் வாக்குகளை பெற பாஜக விரும்புகிறது. எனவேதான் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை பாஜக அரசு அறிவித்துள்ளது.

இந்த விருது தவறான ஆட்களுக்கு வழங்குவதாக நான் கூறவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்பூரி தாக்கூரின் பணி அங்கீகரிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் மக்களின் வாக்குக்காகதான் பாஜக அரசு இதனை செய்கிறது. இந்த விருதுக்கு டாக்டர் எஸ்.சுவாமிநாதனின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. ஆனால் விவசாய வருமானத்தை அதிகரிப்பது குறித்து அவர் தலைமையிலான கமிஷன் அளித்த பரிந்துரையை பாஜக அரசு செயல்படுத்தத் தவறிவிட்டது” என்றார்.

Also Read: "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற அரசியல் சாசனத்தை அழித்துவிட்டார்கள்" - கே. பாலகிருஷ்ணன் விமர்சனம் !