Politics

பா.ஜ.க அரசின் தவறை சுட்டிக்காட்டிய அரசியலமைப்பு நடத்தை குழு உறுப்பினர்கள்!

அரசியலமைப்பு நடத்தை குழுவின் உறுப்பினர்களான 65 முன்னாள் இந்திய அரசுப்பணி அதிகாரிகள், ராமர் கோவில் நிகழ்வில் அரசின் செயல்பாடுகளை குறித்து, “மதம் என்பது தன்னுரிமை சார்ந்தது; மக்கள் சேவை செய்யும் இடத்தில் இருப்போர், மத சாயல்களை விலக்கிக்கொள்ள வேண்டும்” என விமர்சித்துள்ளனர்.

மேலும், அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

1. முன்னாள் இந்திய அரசுப்பணி அதிகாரிகள் என்கிற முறையில், இந்திய அரசியலமைப்பையும் அதன் சட்ட திட்டங்களையும் மதிக்கிறோம். ஆகையால், ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு ஆட்சியமைப்பவர்களே, ராமர் கோவில் திறப்பிற்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது, எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

2. மதம் என்பது தனி மனித உரிமை சார்ந்தது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களது மதத்தை தேர்ந்தெடுத்து, வழிபட உரிமையுண்டு. எனினும், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, அம்மதப்பற்றை காட்சிப்படுத்தாமல் இருப்பதே சரி. குறிப்பாக, நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, மத சார்பை வெளிப்படுத்துவது கண்டிப்பாக சரியான நடவடிக்கை இல்லை.

3. கடந்த ஜனவரி 22 அன்று, தனிப்பட்ட மத நம்பிக்கையையும், அரசுப் பணியின் கட்டுக்கோப்பான நடவடிக்கையையும் ஒன்றிணைத்து அரசியலமைப்பிற்கே கலங்கம் விளைவித்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க.

4. 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதியை பற்றியும், 1949 இல் இருந்து அங்கு நடந்த சிக்கல் குறித்து அறிந்தும், உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பிற்கு செவிசாய்த்தது. ராமர் கோவில் கட்டி எழுப்பவும் வழிவகுத்தது. இது இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமய சார்பற்ற தன்மையை புறந்தள்ளி, மதத்தன்மையை ஓங்கியுள்ளது.

5. எங்களுடைய கவலை என்னவாக உள்ளது என்றால், ராமர் கோவில் திறப்பிற்கு பின் தேசிய அளவில் வன்முறை வெடித்து வருகிறது. மகாராஷ்டிராயின் மிரா சாலையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த அநீதி மறையாத வடுவாகியுள்ளது.

6. அதனைத் தொடர்ந்து, ஞானவாபி மசூதிக்கு எதிரான தீர்ப்பு; மதுரா மசூதி கிருஷ்ணர் பிறந்த இடம் என்ற முன்மொழிவு; தாஜ் மஹாலில் ‘உர்ஸ்’ நிகழ்வு நடத்த தடை கோரி வழக்கு போன்ற எண்ணற்ற மத சிக்கல்கள் உருவாகியுள்ளன.

7. அனைத்து பண்பாடுகளையும் மதிக்கத்தக்க சமூகத்தை படைத்திட, பல்வேறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு ட்டு வருகிறது. அதன் ஒழுங்கு முறையை நிலைநாட்டிட இந்திய அரசியலமைப்பு நிறுவப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சமூக நீதியை சீகுலைக்கும் நடவடிக்கைகளை தவிர்ப்பது, நம் கடமையாக அமைந்துள்ளது.

என தெரிவித்துள்ளனர்.

அறிக்கை வெளியிட்ட 65 அதிகாரிகளும், இந்திய அரசின் அனைத்து துறைகளிலும் உயர்ந்த பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் வேண்டும்...” - பொதுவெளியில் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !