Politics

பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர் அல்ல - ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு !

கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

மணிப்பூர், நாகாலாந்து, அசாம், பீகார், மேற்கு வங்க மாநிலத்தை தொடர்ந்து தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் தற்போது ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ராகுல் காந்தி, " பிரதமர் மோடி தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். உண்மையில் மோடி பொது பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் தெலி என்ற சாதியை சேர்ந்தவர். கடந்த 2000-ம் ஆண்டில் குஜராத்தில் இருந்த பாஜக அரசு தெலி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. இதனால் தனது வாழ்நாள் முழுவதும் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கப் போவதில்லை" என்று விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மோடியின் படிப்பு குறித்த விவரம் வெளியிடப்படாத நிலையில், தற்போது அவரின் சாதி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேடைகளில் தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வாக்குகளை சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொது சிவில் சட்டம் : அத்தை மகன், மகள்களை திருமணம் செய்யத் தடை : தென்னிந்திய மரபை புறந்தள்ளிய பாஜக அரசு !