Politics

இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #BJPLootingOurTax : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணத்திற்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அநீதியைக் கண்டித்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரள போராட்டம் அறிவித்தன. அதன்படி நேற்று ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக அரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைத்து வரும் நிலையில் இந்திய அளவில் #BJPLootingOurTax என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: நேற்று கர்நாடகா, இன்று கேரளா தமிழ்நாடு : ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் வெகுண்டெழுந்த மாநில அரசுகள்!