Politics
ஜார்க்கண்ட் : “நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்” - சட்டப்பேரவையில் சவால் விட்ட ஹேமந்த் சோரன் !
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், கடந்த ஜன 31-ம் தேதி அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டார். நில மோசடி தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினரை பாஜக குறி வைத்து ED, CBI உள்ளிட்டவைகளை ஏவி மிரட்டி அடிபணிய வைக்க முயன்று வருகிறது. இந்த சூழலில் நில மோசடி என்று கூறி ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்துள்ளது பாஜக அரசு. தான் கைது செய்யப்படுவதை உணர்ந்த ஹேமந்த் சோரன், தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, சம்பாய் சோரனை முதலமைச்சராக நியமிக்குமாறு அம்மாநில ஆளுநரிடம் பரிந்துரை செய்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணி ஆட்சி அம்மாநிலத்தில் நடைபெறும் நிலையில், சம்பாய் சோரன் பெரும்பான்மை பெற்று பதவியேற்க தயாராக இருந்தார். ஆனால் பதவியேற்புக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சுமார் 20 மணி நேரம் கழித்து பதவியேற்புக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி கடந்த பிப் 2-ம் தேதி சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். எனினும் அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளது, அனைவர் மத்தியிலும் மேலும் கண்டனங்களை வலுத்தது. இதனால் பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க அம்மாநில கூட்டணி கட்சி உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஐதராபாத்தில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவையில் கூடியுள்ளனர். அதில் கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டார். தொடர்ந்து தற்போது அம்மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஹேமந்த் சோரன், தன் மீதான குற்றங்களுக்கு சரியான ஆதாரங்களை காட்டினால், தான் அரசியலை விட்டே விலகி விடுவதாக சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேரவையில் அவர் பேசுகையில், “கடந்த ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டேன். நான் கைது செய்யப்பட்ட நாள் 'ஜனநாயகத்தின் கருப்பு தினம்'. என் கைது விவகாரத்தில் ராஜ்பவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. நான் 8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளேன்.
உண்மையில் அவர்களுக்கு தைரியம் இருந்தால், என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்ட சொல்லுங்கள். என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன். என்னை சிறையிலடைத்தால் வெற்றி பெற்று விடலாமென பாஜக நினைக்கிறது. இது ஜார்க்கண்ட். சுதந்திரத்துக்கு முன்பிருந்தே உரிமைகளுக்கு போராடி வரும் மக்கள் நாங்கள்." என்றார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!