Politics

“தரம் தாழ்ந்த செயல்.. பாஜகவின் தந்திரம்” - ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஹேமந்த் சோரன் பெற்றதாகவும், நில மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வரும் பாஜகவை சேர்ந்தவருமான ரகுபர்தாஸ் வைத்திருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வழக்கும் தொடுக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வந்த நிலையில், நேற்றும் (31.01.2024) அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனிடம் விசாரணை மேற்கொண்டது. நில மோசடி தொடர்பாக நேற்று ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் அவரை கைது செய்தது.

ஹேமந்த் சோரன் கைதுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஹேமந்த் சோரனின் கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல். புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்ததாகும். இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது.

பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் சிக்கியிருந்தாலும், அவர்களுக்கு தலைவணங்க மறுத்து உறுதியாக நிற்கிறார். இன்னல்களை எதிர்கொண்டாலும் ஹேமந்த் சோரனின் மனஉறுதி பாராட்டுக்குரியதாக இருக்கிறது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு உத்வேகமளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன், அம்மாநில ஆளுநரை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி கொடுத்ததோடு, அம்மாநில போக்குவரத்துறை அமைச்சர் சம்பாய் சோரனை முதலமைச்சராக பரிந்துரை செய்துள்ளார்.

எனினும் கிட்டத்தட்ட 1 நாள் ஆகும் நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அழைப்பை, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்னும் விடுக்கவில்லை. இதனால் அம்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !