Politics
ஜார்க்கண்ட் : “MLA-க்களுடன் குதிரை பேரம் நடத்த திட்டமா? அரசை முடக்க திட்டமா ?” - காங்கிரஸ் சரமாரி கேள்வி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் சுரங்கத் துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பெற்றதாகவும், நில மோசடி செய்ததாகவும் முன்னாள் முதல்வரும் பாஜகவை சேர்ந்தவருமான ரகுபர்தாஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ஹேமந்திடம் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
அதன்படி நில மோசடி தொடர்பாக நேற்று ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னால், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு, இது தொடர்பான கடிதத்தை அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
மேலும் முதலமைச்சராக அம்மாநில போக்குவரத்துறை அமைச்சர் சம்பாய் சோரனை புதிய முதலமைச்சராக தேர்வு செய்து ஆளுநரிடம் பரிந்துரையும் செய்தார். இதைத்தொடர்ந்து ஹேமந்த் சோரனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட அம்மாநில ஆளுநர், தற்போது வரை புதிய முதலமைச்சர் பதிவியை ஏற்பதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசை முடக்கி, குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர திட்டமா என காங்கிரஸ் அம்மாநில ஆளுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஹேமந்த் சோரன் ராஜினாமாவுக்கு பிறகு புதிய முதலமைச்சரை நியமிக்க அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து 18 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஜார்கண்ட் ஆளுநர் ஏன் இன்னும் பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை? ஏன் அவர் மௌனமாக இருக்கிறார்?
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணிக்கு 48 எம்எல்ஏக்களின் மெஜாரிட்டி இருக்கிறது. பாஜக அணிக்கு 33 பேர் மட்டுமே உள்ளனர். அப்படி இருக்கும்போது ஆளுநர் ஏன் இன்னும் தாமதம் செய்கிறார்? பிரதமர், உள்துறை அமைச்சருடைய பதிலுக்காக காத்திருக்கிறாரா? இல்லை எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்த திட்டமா? அதுவுமில்லை என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை முடக்கி விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர திட்டமா?. தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்கட்சிகளையும் முடக்குவது தான் பாஜகவின் திட்டமா" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!