Politics
நீதி பயணம் : “ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்...” - அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
கடந்த 2022 - 2023-ம் ஆண்டு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யை ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி.மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18-ம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாமிற்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தியின் யாத்திரையின்போது அங்கு வந்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமெழுப்பினர். ஆனால், அவர்களை கண்டதும் ராகுல் காந்தி பேருந்தில் இருந்து இறங்கி அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார். எனினும் ராகுலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அசாமில் நேற்று காலை ராகுல் காந்தி ஶ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு சென்றார். ஆனால், கோவிலின் முன்பு நின்ற போலீசார் கோவிலுக்குள் விடாமல் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தினர்.
அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் செல்ல விடாமல் ராகுல் காந்தியை அசாம் மாநில பாஜக அரசு தடுத்து நிறுத்தியதால். ராகுல் காந்தியின் யாத்திரை கவுகாத்தி வழியாக செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், யாத்திரை நகருக்குள் வர முதல்வர் ஹிமந்த சர்மா தடை விதித்ததோடு, அந்த பகுதியில் ஏராளமான போலீசாரையும் குவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தியை நகரத்திற்குள் வராமல் இருக்க போலீஸார் மிகப்பெரிய அளவில் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால், தடுப்புகளை அகற்றிவிட்டு நகருக்குள் செல்ல காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அசாமில் நீதி பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பயணத்தை பாஜகவினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும் அதற்கு அசாம் போலீசார் உறுதுணையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜகவினர் பல இடங்களில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி ராகுல் காந்தி அருகே செல்வதற்கு அசாம் போலீசார் திட்டமிட்டு அனுமதிப்பதாவும், இதனால் நிலைமை மோசமாகி ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ராகுல் காந்திக்கும் அவருடன் பயணிப்போருக்கும் எந்த ஆபத்து ஏற்படாமல் இருக்க அசாம் டிஜிபிக்கும், முதலமைச்சருக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கார்கே வலியுத்தியுள்ளார்.
தற்போது ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!