Politics

“அரசியல் எதிரிகளை பயமுறுத்த அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது” - சரத் பவார் விமர்சனம் !

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவசேனா பாணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டது. பின்னர் அஜித் பவார், சரத் பவார் என இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அரசியல் எதிரிகளை அதிகார துஷ்பிரயோகம் மூலம் அமைதிப்படுத்தவும், அவர்களை பயமுறுத்தவும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது என சரத் பவார் கூறியுள்ளார். சமீபத்தில் சரத் பவார் அணியை சேர்த்த எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது குறித்து பேசிய சரத் பவார், அரசியல் எதிரிகளை அதிகார துஷ்பிரயோகம் மூலம் அமைதிப்படுத்தவும், அவர்களை பயமுறுத்தவும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது". இதுபோன்ற போக்குகளை முறியடிக்க நாம் மக்களிடம் செல்ல வேண்டும்"என்று கூறியுள்ளார். முன்னதாக பாஜக கூட்டணி அரசில் இணைந்த பின்னர் அஜித் பவார் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” : திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து!