Politics

இரண்டாயிரம் ஆண்டு பழமையான கோவில்களை மோடி அரசு இடித்தது : ஜோதிர் சங்கராச்சார்யாவின் முழு பேட்டி விவரம் !

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதே இடத்தில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் கட்டி முடிக்கப்படாத இந்த ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து , ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா? என பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி, கூறியிருந்தார். மேலும் ராமர் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உத்தரகாட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி சாஸ்திரங்களுக்கு எதிராக புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது எனக் கூறியதோடு சங்கராச்சாரியாக்கள் யாரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்தனர்.

இந்த நிலையில், அவரின் பேட்டி பிசிசி தமிழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அவரின் பேட்டி வருமாறு,

கேள்வி : கும்பாபிஷேக திட்டத்தில் உங்களுக்கு ஏன் கோபம்?

கோவில் என்பது கடவுளின் உடல். அதன் உச்சி அவரின் கண்கள். அதன் கலசம் அவருடைய தலை. கொடி மரம் ஆகியவை அவருடைய முடி. இப்படித்தான் எல்லாமே நடக்கும். இப்போதுசுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. அதில் நீங்கள் பிரதிஷ்டை செய்தால் அது அங்கஹீனம் போல ஆகிவிடும்.

ஊனமுற்றவர்களை விக்லாங் என்று அழைக்க வேண்டாம், திவ்யாங் என்று அழைக்க வேண்டும் என்று மோதிஜி கூறுகிறார். இன்று கோவில் திவ்யாங் கோயிலாக உள்ளது. சகல உடல் உறுப்புகளையும் கொண்ட பெருமான் திவ்யாங் கோயிலில் நிலைபெறுவது எப்படி? அவர் ஒரு பூரண புருஷர். பூரண புருஷோத்தமர். எந்த விதமான குறையும் இல்லாதவர். கோவில் கட்டி முடித்த பிறகுதான் குடமுழுக்கு என்ற சொல்லை சேர்க்க முடியும். இப்போது அங்கு உயிர் இல்லை. எனவே பிரதிஷ்டை செய்ய முடியாது, அது நடக்கிறது என்றால் அதை செய்பவர் பலவந்தமாக எது வேண்டுமானாலும் செய்வார்.

கேள்வி : அத்தகைய சூழ்நிலையில், அதை என்ன சொல்லி அழைப்பது சரியானதாக இருக்கும்?

அயோத்தி ராமர் கோவில் தலை இன்னும் உருவாகவில்லை. அதில் உயிரை வைப்பதில் அர்த்தமில்லை. முழுமையான உடல் உருவான பிறகுதான் உயிர் வரும். இன்னும் அதற்கு நேரம் இருக்கிறது. எனவே இப்போது நடக்கும் திட்டத்தை மதத்தின் பார்வையில் குடமுழுக்கு என்று அழைக்க முடியாது.நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்தலாம். ராம பஜனை செய்யலாம், பாடல்களை இசைக்கலாம். விரிவுரைகள் செய்யலாம். இவற்றையெல்லாம் செய்யலாம். ஆனால் முழுமையாக கோயில் கட்டப்பட்ட பிறகுதான் குடமுழுக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் பொருந்தும்.

கேள்வி : சிலையை பிரதமர் பிரதிஷ்டை செய்ய முடியுமா?

பிரதமர் மத சார்பின்மை உறுதிமொழியை மூன்று முறை எடுத்துள்ளார். ஒருமுறை பாஜகவில் உறுப்பினராக ஆவதற்காக. ஏனென்றால் அக்கட்சி மத சார்பற்ற கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் அளித்துள்ளது. இரண்டாவது முறையாக எம்.பி.யான போது அவர் அரசியல் சாசன பிரமாணம் எடுத்துக்கொண்டார். பிரதமரான போது மூன்றாவது முறையாக மத சார்பின்மைப் பிரமாணம் எடுத்தார். எனவே, எந்த மதப் பணியிலும் ஈடுபட அவருக்கு நேரடி உரிமை இல்லை.

அனைவரின் பிரதிநிதியாக இருந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி அவர் பேசினால், நாட்டின் எல்லா மதத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அங்கு பிரதிநிதித்துவப்படுத்தும் போது மட்டுமே இது நடக்க முடியும்.ஒரே ஒரு மதத்துடன் அவர் இதை செய்யக்கூடாது. எல்லா மதங்களிலும் செய்ய வேண்டும் அல்லது எந்த மதத்திலும் செய்யக்கூடாது.

கேள்வி : பிரதமர் மோதி ‘எஜமானராக’ பூஜையை முன்னின்று நடத்த முடியுமா?

நம்மிடம் சில மத நம்பிக்கைகள் உள்ளன. திருமணமானவர்கள் யாரும் தன் மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த மதப் பணியிலும் ஈடுபட உரிமை இல்லை. அவர் திருமணமானவர். அவருக்கு மனைவி உள்ளார். இல்லையென்றால் அது வேறு விஷயம். அவருடன் உங்களுக்கு என்ன உறவு, என்ன இல்லை? பேச்சுவார்த்தை உள்ளதோ இல்லையோ. ஒன்றாக வாழ்கிறார்களா இல்லையா. இது வேறு விஷயம். ஆனால் மதம் தொடர்பான ஒரு வேலை செய்யும்போது மனைவிக்கு உரிமை உண்டு. அவள் சரி பாதி.

சப்தபதி செய்யும்போது சமய காரியங்களில் ஈடுபடும் போது உனக்கு என் அருகில் இருக்கும் உரிமை தருவேன் என்று உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த வாக்குறுதியை ஏற்கனவே அவர் கொடுத்துள்ளதால், மத நிகழ்ச்சியில் மனைவியை ஈடுபடுத்தியே ஆக வேண்டும். நீங்கள் அவருக்கு (மனைவி) இந்த உரிமையை கொடுக்காமல் இருக்க முடியாது.

கேள்வி : நீங்களும் காங்கிரஸ்காரர் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?

சரிதான், அவர்கள் வேறு என்னதான் சொல்ல முடியும்? கோயில் என்பது தெய்வத்தின் உடல் என்று எல்லா சாஸ்திரங்களும் தெளிவாகக் கூறுகின்றன. முழுமையடையாத கோவிலில் பிரதிஷ்டை செய்ய முடியாது.இதற்கு அவர்களிடம் பதில் இல்லை. மாறாக நான் காங்கிரஸ்காரன், பிராமணன் இல்லை, கோபம் கொண்டவன், மோதிக்கு எதிரானவன் என்று சொல்கிறார்கள். இவை என்னுடைய கேள்விகளுக்கு பதில் அல்ல.

கேள்வி : குடமுழுக்கு திட்டத்தை எதிர்ப்பதில் உங்களுக்கு பயம் இல்லையா?

நான் யார்? இவ்வளவு பெரிய பாரம்பரியம், இவ்வளவு பெரிய வேதங்களின் வலிமை என்னிடம் உள்ளது. நான் வேதத்தின் வலிமையால் பேசுகிறேன். இந்த அரசியல் இந்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு நடத்தி ’மிஸ்ட் கால்’ இயக்கத்தை ஆரம்பித்து 10 கோடி பேரை சேர்த்துள்ளோம் என்றார். எனவே 10 கோடி பேர் பாஜகவினர். அவர்களுக்கு 21 கோடி வாக்குகள் கிடைக்கின்றன.

இத்தனை பேர் இவர்களுக்கு ஆதரவானவர்கள். ஆனால் நாட்டில் 100 கோடி இந்துக்கள் உள்ளனர். 50 கோடி இந்துக்கள் சனாதனிகள். அவர்கள் குருக்களின் கட்டளைகளை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்கள் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் இப்போதும் எங்களை பின்தொடர்கிறார்கள்.

கேள்வி : குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா?

இல்லை, எனக்கு அழைப்பு கடிதம் எதுவும் வரவில்லை.பாரம்பரியமாக பின்பற்றி வந்த நெறிமுறையை பறித்து விட்டீர்கள். இந்து மதத்தின் குரு அல்லாத தலாய் லாமாவுக்கு நீங்கள் நெறிமுறையை வழங்குகிறீர்கள். ராமர் கோவிலுக்கு நீங்கள் சங்கராச்சாரியாரை அழைக்கவில்லை. தலாய் லாமாவை அழைக்கிறீர்கள். இதெல்லாம் என்ன?

கேள்வி : பிரதமர் மோதி மீது உங்களுக்கு தனிப்பட்ட கோபம் உள்ளதா?

என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். 2019 ஆம் ஆண்டில் அவருக்கு (பிரதமர் மோதி) எதிராக ஒருவரை நாங்கள் நிறுத்தினோம். ஏனென்றால் விஸ்வநாத் காரிடார் என்ற பெயரில் சுமார் 150 கோயில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் தூக்கி எறியப்பட்டன. நமது புராண காலத்து கோயில்கள் இதில் அடங்கும்.

சில கோவில்கள் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவை. சில ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த காரணத்திற்காகவே நாம் ஔரங்கசீப்பை வெறுத்தோம். இப்போது நம் சகோதரனோ அல்லது சகோதரியோ அதையே செய்தால், அவரை / அவளை எப்படி மன்னிப்பது. இதைப்பற்றி எந்த செய்தித்தாளும் தொலைக்காட்சியும் எழுதாது. காட்டாது.அவருக்கு எதிராக ஒரு துறவியை நிறுத்துவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தோம். எல்லோரும் அவரைப் பேட்டி எடுப்பது இயற்கையானது, மோதி ஒரு மதவாதி என்று கருதப்படுகிறார். அவருக்கு எதிராக ஒரு துறவியை நிறுத்த வேண்டிய வேண்டிய அவசியம் ஏன் என்று கேள்வி கேட்கப்படும்.

அவர் நின்றால் கோயில்கள் இடிக்கப்பட்டன என்று சொல்ல முடியும். நமது மதம் சேதம் அடைந்தது என்று சொல்லமுடியும். எனவே நாங்கள் அவரை களமிறக்கினோம். ஆனால் அவரது வேட்புமனு எந்த தவறும் இல்லாமல் இருந்தபோதும் நிராகரிக்கப்பட்டது.

கேள்வி : இந்து மதத்தின் வரையறை மாற்றப்படுகிறதா?

வேதம், சாஸ்திரம், குருக்கள், தர்மாச்சாரியார்கள் எல்லாரையும் கடைபிடிக்க மாட்டோம், எங்களின் தலைவர்தான் எல்லாமே, அவர் என்ன சொன்னாலும் செய்வோம் என்பது இப்போது நடந்து வருகிறது. இந்த உணர்வு தூண்டப்படுவதால் இந்துக்கள் வழிதவறி வருகின்றனர்.

ராஜாவை நமது சின்னமாகக் கருதினால், அரசனுடன் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும் என்பதுதான் அதன் பாதகம். ராஜாவுக்கு எப்பொழுதும் எதிரிகள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அலட்சியத்தால் அரசன் தோற்றுவிட்டால், இந்து எங்கே போவான்? அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்து தோற்றுவிடுவான்.ராஜாவிடம் முழுவதுமாக இணைந்துவிட மாட்டோம் என்ற அதே முறையைத்தான் நம் முன்னோர்களும் கடைப்பிடித்துள்ளனர். ராஜாவும் நம்மில் ஒரு பகுதிதான்.

தலைவரின் சுற்றறிக்கையைப் பின்பற்றினால் நீங்கள் இந்து என்பது ஒரு முறையாகிவிட்டது. இது சரியல்ல. இறையியலில் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றுபவர்தான் இந்து.

கேள்வி : ராமஜென்ம பூமி அறக்கட்டளையுடன் உங்களுக்கு ஏதாவது சண்டையா?

எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. உரிமை எங்களுக்குத்தான். ஏனென்றால் சங்கராச்சாரியார்களுக்கு ஏற்கனவே அறக்கட்டளை இருந்தது. ஆனால் எந்த காரணமும் சொல்லாமல் அறக்கட்டளை நீக்கப்பட்டது.

இதில் நாட்டின் பெரிய பெரிய மதத் தலைவர்கள் இருந்தனர், நான்கு சங்கராச்சாரியார்கள் இருந்தனர், ஐந்து பேர் வைஷ்ணவ ஆச்சார்யர்கள், 13 அகாடாக்களின் தலைவர்கள் இருந்தனர். அத்தகைய அறக்கட்டளையை நீக்கி, தனது தொண்டர்களின் ஒரு அறக்கட்டளையை பிரதமர் உருவாக்கினார்.இந்த நிகழ்ச்சியை அங்குள்ள ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கு ஏதோ ஒரு நிர்ப்பந்தம் இருக்க வேண்டும். இதை பெரிய அளவில் பார்த்தால் நாடு முழுவதும் வீடுவீடாக அரிசி விநியோகிக்க அவருக்கு உதவுபவர்கள் மட்டுமே இதற்கு வருவார்கள்.

கேள்வி : இந்த கோவில் ராமானந்தர் பிரிவைச் சேர்ந்தது என்று சம்பத் ராய் கூறினாரே?

கோவில் ராமானந்தர் பிரிவினருக்கு சொந்தமானது என்றால் நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள். தயவுசெய்து அங்கிருந்து விலகி ராமானந்தர் பிரிவினரிடம் கொடுங்கள். ஜகத்குரு ஸ்வாமி ராமானந்த் ராம்நரேஷ்சார்யா, ராமானந்தர் பிரிவின் மிகப்பெரிய குரு ஆவார். எங்களுக்கு அழைப்பு கூட வரவில்லை என்று அவரது பிரிவினர் சொன்னார்கள்.

Also Read: உல­கப் பொது­ம­றை­யான திருக்குறளை கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல் - முரசொலி விமர்சனம் !