Politics
மாநிலங்களின் நிதியை குறைக்க பார்த்த மோடி... : நிதி ஆயோக் அலுவலர் பேச்சால் வெளுத்த பாஜக உண்மை முகம்!
ஒன்றிய பாஜக அரசுக்கு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுங்களை வைத்தும், கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், உரிய நிதியை ஒதுக்காமலும் வஞ்சித்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பாஜக சித்தாந்தத்துக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களை குறிவைத்து வஞ்சித்து வருகிறது.
அண்மையில் கூட மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதும் கூட, வானிலை மையத்தின் தவறான கணிப்பால் இந்த பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணம் கேட்டது. மேலும் இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கோ ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது எல்லாம் ஒரு பேரிடரா? சுனாமியையே தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று, அறிவுச்சுடராக பேசியிருந்தார்.
இதனால் ஒன்றிய அமைச்சருக்கு கடும் கண்டனங்கள் வலுத்தது. கேட்ட நிதிக்கு பதிலாக ரூ.5884.49 கோடி (அதாவது வெறும் 4.61 விழுக்காடு) மட்டுமே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது. எனினும் ஒன்றிய அரசின் நிதிக்கு காத்திருக்காமல், முதலமைச்சரின் சீரிய முயற்சியால் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணம் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை அறிவித்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி நிதியை வெளியிட்டது. அதாவது 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.
அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக தொகை விடுவிக்கப்படுவதாக விமர்சித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து பாஜக ஆளாத குறிப்பாக தென் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கும் நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நிதி ஆயோக் என்று சொல்லப்படும் நிதி ஆணையத்துடன் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு தேவையான நிதியை குறைத்து கொடுக்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரபல ஊடகமான அல் ஜஸீரா (Al Jazeera) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது 2013-ம் ஆண்டு 14-வது நிதி ஆணையம் (NITI Aayog) அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில்தான் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைக்க மோடி தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். மேலும் அதுவரை 32 சதவிகிதம் வரை நிதியை பெற்றுக் கொண்டிருந்த மாநிலங்களுக்கு, 42 சதவிகிதத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
ஆனால் 2014-ல் பாஜக வெற்றி பெற்று பிரதமராக ஆட்சிக்கு வந்த மோடி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 32 சதவிகிதத்திற்கு பதிலாக 33 சதவிகிதம் போதும் என்றார். அரசியல் சாசனப்படி, நிதி ஆணைய பரிந்துரையை ஒரு அரசு ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த பரிந்துரையை அரசு ஏற்கலாம் அல்லது நிராகரித்து புதிய ஆணையத்தை அமைக்கலாம். இரண்டை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.
மேலும் அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வை குறைக்க வேண்டும் என்று மோடி கூறியதாகவும், ஆனால் இதற்கு நிதி ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி மோடி தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முதலில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டில் மாநிலங்களின் நிதி பகிர்வு குறைக்கப்பட்டு இருந்ததாகவும், அதன்பிறகே அது மாற்றப்பட்டதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
அதே சமயத்தில் , மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி குறித்த நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மறைமுகமாக நாடாளுமன்றத்தில் அதை வரவேற்பதாக நாடாளுமன்றத்தில் மோடி பொய்யாக உரைத்துள்ளார். மேலும் அப்போது நிதி ஆணையத் தலைவராக இருந்த ஒய்.வி.ரெட்டிக்கு, மோடி அழுத்தம் தந்ததாக தற்போதைய நிதி ஆயோக் தலைமை இயக்குநர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி மோடிக்கும், நிதி ஆணையத்தின் அப்போதைய தலைவர் ஒய்.வி.ரெட்டிக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ததே தான்தான் என்றும் ஆனால் ரெட்டி அதற்கு பணியவில்லை என்றும் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். மேலும் "சகோதரரே... உங்க தலைவர்கிட்ட போய் சொல்லுங்க.., அவருக்கு வேற வழியே இல்லன்னு" என்று ரெட்டி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, நிதி குறைக்கப்பட்ட பட்ஜெட்டை கைவிட்டுவிட்டு, இரண்டு நாட்களில் அவசரவசரமாக ஒரு பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்தது ஒன்றிய அரசு. பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மோடி, “நாடு வலுப்பெற, மாநிலங்கள் வலுப்பெற வேண்டும். எனவே நாங்கள் மாநிலங்களுக்கான நிதியை 42 சதவிகிதம் அதிகரித்து தரவிருக்கிறோம்” என வாய் கூசாமல் பேசினார்.
ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஒன்றியத்தில் பணிபுரியும் ஒருவரே இப்படி ஒரு பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மோடிக்கும், பாஜக அரசுக்கும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக பிரதமர் மோடி அண்மையில் பேசியிருக்கிறார். இதற்கு ஆதாரமாக நிதி ஆயோக் (நிதி ஆணையம்) குழுவின் அறிக்கையை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் 2023-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 111வது இடத்தை பிடித்தது.
இது ஒவ்வொரு ஆண்டும் பின்னோக்கியே செல்கிறது. இப்படி ஆண்டுதோறும் பசி குறியீட்டில் இந்தியா பின்னோக்கி செல்லும் நிலையில், வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !