Politics
13 ஆண்டுகளுக்கு பிறகு... காங்கிரஸில் இணைந்த ஆந்திர முதல்வர் சகோதரி : விறுவிறுப்பாகும் நாடாளுமன்ற தேர்தல்!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது சகோதரி தான் YS ஷர்மிளா. இவர்களது தந்தை YS ராஜசேகர ரெட்டி காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் 2004 - 2009 வரை முதலமைச்சராக இருந்த இவர், 2009-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆந்திர முதலமைச்சராக இருந்தார்.
ஆனால் அதே ஆண்டு எதிர்பாராத விதமாக நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் YS ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவர்களது குடும்பம் காங்கிரஸில் இருந்து விலகி, 2011-ல் YSR காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் YS ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது இவரது சகோதரி YS ஷர்மிளா, இந்த கட்சியில் இணைந்து தீவிர பணியாற்றினார்.
அப்போது நடைபெற்ற 2019-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு YSR காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். YSR காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு இவரது உழைப்பும் முக்கிய பங்கு வாய்ந்தது என்று அம்மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இவருக்கும், இவரது சகோதரரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய YS ஷர்மிளா, புதிதாக YSR தெலங்கானா கட்சி என்ற ஒன்றை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கினார். தற்போது வரை அக்கட்சியை நடத்தி வரும் இவர், அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை.
YSR தெலங்கானா கட்சி, தெலங்கானா மாநில தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு பிரியும் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போதே இவர் காங்கிரஸில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று காங்கிரஸில் இணைந்தார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் தன்னையும், தனது YSR தெலங்கானா கட்சியையும் இணைத்துக்கொண்டார் YS ஷர்மிளா. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் வரவுள்ள நிலையில், தற்போது YS ஷர்மிளா காங்கிரஸில் இணைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலும் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் YS ஷர்மிளா இணைந்துள்ளது ஆந்திரா அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் இணைந்தது குறித்து YS ஷர்மிளா கூறுகையில், "YSR தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிதான் அனைத்து பிரிவு மக்களையும் இணைத்து செயல்படும் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக உள்ளது" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!