Politics

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழிலே தவறு... இது கூட தெரியாதா ? விமர்சிக்கும் இணையவாசிகள் !

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாக திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த அழைப்பிதழில் 'INVITATION' என்பதற்கு பதில் 'INVITAION' என தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ராமர் கோவில் திறப்பை உலகளவில் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், அதன் அழைப்பிதழில் இத்தனை பெரிய தவறு ஏற்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.