Politics

திமுகவின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு தடை கோரி வழக்கு- அதிரடியாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக மாநாடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் திமுகவின் மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி சார்பில் தொடங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகளை பெற்று சாதனை படைத்தது.

இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தை தடை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூரியகாந்தி, கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், இன்றைய மாணவர்கள் நல்ல அறிவுத் திரனுடனும், விழிப்புணர்வுடனும் உள்ளனர். மாணவர்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே, அரசியல் கட்சியின் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Also Read: “‘இன்னார்தான் படிக்க வேண்டும்’ என்ற நிலையை மாற்றியது திராவிட அரசு...” - முதலமைச்சர் பெருமிதம் !