Politics
இராமர் கோயில் திறப்பு : “இஸ்லாமியர்களும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல வேண்டும்” - RSS நிர்வாகி சர்ச்சை பேச்சு!
உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி பகுதியில் 16-ம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் இராமர் பிறந்ததாகவும், அதனை திரும்ப இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். மேலும் அது பெரிய கலவரமாக மாறி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்வ அமைப்புகள் அதனை இடித்தனர்.
இந்த சம்பவத்தில் பல மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கே இராமர் இருந்ததாகவும், அதனால் அங்கே இராமர் கோயில் கட்டப்போவதாகவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த சூழலில் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட அனுமதித்து 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த ஆண்டே கொரோனா பேரிடரின்போது அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இராமர் கோயிலின் பணிகளை பாஜக அரசு மேற்கொண்டது.
தொடர்ந்து தற்போது இந்த கோயில் கிட்டத்தட்ட கட்டிமுடிக்கப்பட்டுள்து. இதைத்தொடர்ந்து தற்போது இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதோடு கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4- 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இராமர் கோயிலை திறந்து ஒரு மதத்தை சார்ந்த மக்களிடம் ஒரு நிலைப்பாட்டை புகுத்த பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இராமர் கோயில் திறப்பு விழாவின்போது இஸ்லாமியர்களும் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வேண்டும் என்று RSS நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாஜக, ஆர்.எஸ்.எஸின் கீழ் இயங்கும் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் (Muslim Rashtriya Manch) தலைவருமான இந்திரேஷ் குமார், 'ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் - ஒரு பொதுவான பாரம்பர்யம்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களில் 99 சதவிகிதம் பேர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக்கெல்லாம் ஒரே மூதாதையர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறே இருப்பார்கள். அவர்கள், தங்களின் மதத்தைத்தான் மாற்றியிருக்கிறார்களே தவிர, நாட்டை அல்ல. நமக்கென்று பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள், கனவு, அடையாளம் போன்றவை இருக்கிறது. நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக்கும் வெளிநாட்டினருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அயோத்தியில் இராமர் கோயில் திறப்பு விழா சமயத்தில், மதரஸாக்கள், தர்காக்கள், மக்தாப்களில் 'ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்' என்று 11 முறை முழங்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் வழக்கமான தொழுகையை மேற்கொள்ளலாம்"என்றார். இவரது பேச்சு தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!