Politics

MLA வேட்பாளரை அமைச்சராக்கிய பாஜக அரசு... விமர்சிக்கும் காங்கிரஸ்... ராஜஸ்தான் அரசியலில் பரபர !

கடந்த நவம்பர் மாதம் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றது. அதன்படி 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 115 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பிடித்த பாஜக ஆட்சியமைத்தது. தொடர்ந்து முதலமைச்சராக பஜன்லால் ஷர்மா முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில் 200 தொகுதிகளில் மீதமுள்ள 1 தொகுதியான கரன்பூர் (Karanpur) தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானார். இதையடுத்து இந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜனவரி 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்தர் பால் சிங்கை (Surender Pal Singh) அமைச்சராக்கியுள்ளது நேற்று அமைச்சர் பதவியேற்பு விழா அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முன்னிலையில் நடைபெற்றது. இதில் இவருடன் சேர்த்து 22 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த சூழலில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட சுரேந்தருக்கும், அம்மாநில பாஜக அரசுக்கும் காங்கிரஸ் கண்டனங்கள் தெரிவித்து வருகிறது.

ஏனெனில் பாஜக ஆட்சியமைத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், நேற்று தான் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதில் இன்னும் 5 நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதி பாஜக வேட்பாளரை அமைச்சராக பாஜக அரசு அமைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.மேலும் இது தேர்தல் ஆணையத்திற்கு எதிரான செயல் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிகழ்வால் தற்போது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தானின் ஹவா மஹால் (Hawa Mahal) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த பாலமுகுந்த் ஆச்சார்யா (Balmukund Acharya) என்பவர் தான் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே சாலை ஓரத்தில் உள்ள இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு, பின் அதனை வாபஸ் பெற்று சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கோடி மதிப்பிலான 126 மரங்கள் கடத்தப்பட்ட வழக்கு : பாஜக எம்.பியின் சகோதரரை அதிரடியாக கைது செய்த போலிஸ் !