Politics

ஒரு மாதம் ஆகியும் அறிவிக்கப்படாத அமைச்சரவை : முடங்கிய அரச நிர்வாகம்.. ராஜஸ்தான் பாஜகவில் தொடரும் மோதல் !

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னர் டிசம்பர் 4-ம் தேதி மிசோரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியை கைப்பற்றிய அடுத்த நாளே அங்கு பாஜக எம்.எல்.ஏ இறைச்சி மற்றும் அசைவ உணவு கடைகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டு சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் அங்கு முதலமைச்சராக பஜன்லால் என்பவரை பாஜக மேலிடம் அறிவித்தது. இதனால் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் அங்கு அமைச்சரவையை அமைக்க முடியாமல் பாஜக மேலிடம் தடுமாறியது.

தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், அங்கு இன்னமும் அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில், அரசு இயந்திரம் செயல்படாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பாஜக அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் ஏராளமான அதிருப்தியாளர்கள் இருப்பதால் அமைச்சரவை அமைக்க இன்னும் காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையீடு, சாதி ரீதியிலான ஓட்டுகள் ஆகியவையும் இந்த காலதாமதத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

Also Read: நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?