Politics
குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!
முரசொலி தலையங்கம் (21.12.2023)
முழுத் தொகையையும் முழுமையாக வழங்குக!
மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார்கள். புயல் -– மழை -– வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி, இதனைச் சரி செய்ய ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் –- திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களும் –- சீர் செய்யப்பட வேண்டிய மாவட்டங்களாக உள்ளன.
பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. கனமழையின் காரணமாக, சாலை, பாலம், நீர்நிலை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகளுக்கும் பெரிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளைச் சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராமச் சாலைகள் ஆகியவற்றைச் சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.
புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகிய வற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் இந்த நிதி கோரப்படுகிறது.குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்கத் தேவையான உதவிகளை வழங்கவும் – பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் இந்த நிதி கோரப்படுகிறது.
வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு குடும்பத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். கடந்த 17 ஆம் தேதியில் இருந்து 6 ஆயிரம் கொடுக்கும் பணி தொடங்கி விட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல் மாநில அரசே நிதி வழங்கலைத் தொடங்கி விட்டது. இதற்கு மட்டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவை போக பல்வேறு இழப்புகளைச் சந்தித்தவர்களுக்கு வழங்கப்படும் நிதியையும் முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி இருக்கிறார்கள்.
உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் –- சேதம் அடைந்த குடிசை களுக்கு ரூ.8 ஆயிரம் – -பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் - – பல்லாண்டு பயிர்கள், மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22 ஆயிரத்து 500 – -மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 எருது, பசு உயிரிழந்து இருந்தால், ரூ.37 ஆயிரத்து 500 –- ஆடு உயிரிழந்து இருந்தால் 4 ஆயிரம் –- கட்டுமரங்கள் முழுமையாகச் சேதம் அடைந்திருந்தால், ரூ.50 ஆயிரமும், பகுதி அளவு சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரமும் – - வல்லம் வகை படகுகளுக்கு ஒரு லட்சமும், இயந்திரப் படகுகளுக்கான இழப்பீடாக ரூ.7.50 லட்சமும், வலைகளுக்கு ரூ.15 ஆயிரமும் – - என இழப்பீடுகளை அனைத்துத் தரப்பினருக்கும் தர முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவை அனைத்தும் பெருமளவு நிதியை உள்வாங்கும் அறிவிப்புகள் ஆகும்.
‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவளாகங்களைச் சுத்தம் செய்ய ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளைச் சுத்தம் செய்ய ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உள்ளடக்கித் தான் நிதியைக் கோரியுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்தொகையாக 12,659 கோடிரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரி உள்ளார்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இத்தொகையை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். வழங்கினால்தான் மக்களுக்கு நிவாரணத் தொகையையும் வழங்க முடியும். உள்கட்டமைப்புகளையும் சீர்செய்ய முடியும்.
‘‘மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்” என்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதனையும் ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மக்கள் பணிகளில் குறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. – பா.ஜ.க. போன்ற கட்சிகள், ஒன்றிய அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுத் தருவதில் அக்கறை காட்ட வேண்டும்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!