Politics

142 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் : நாடாளுமன்ற தாக்குதல் குறித்த கேள்வியால் அச்சத்தில் பாஜக அரசு !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த டிச.13ம் தேதி வழக்கம் போல் மக்களவை தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பார்வையாளர்கள் மாடத்திலிருந்து 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்து புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் மக்களவை வெளியேயும் பெண் உட்பட 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஈடுபட்ட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதில் ஒருவருக்கு பாஜக எம்.பியின் தொடர்பு இருப்பதும், நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு அவரிடம் கையெழுத்து பெற்று வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் சபாநாயகர்.

முதலில் கடந்த டிச.15ம் தேதிதான் கேள்வி எழுப்பிய கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கசேடன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டநிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு மேலும் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று வரை திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சி.பி.ஐ., சி.பி.எம்., என இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மொத்தம் 92 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவர்கள் இந்த கூட்டதொடர் முழுவதும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மேலும் எம்.பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்படாத எதிர்க்கட்சி எம்.பிக்கள் விவாதம் நடத்த வலியுறுத்தினர்.

அதோடு நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறும் வலியுறுத்திய நிலையில், கோபமடைந்த சபாநாயகர் மேலும் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இதுவரை நாடாளுமன்றத்தின் மக்களவையில் 96 எம்.பிக்களும், மாநிலங்களையில் 46 எம்.பிக்களும் என மொத்தம் 142 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை வரலாறு காணாத வகையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 142 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: தென் மாவட்ட மக்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர் தேவை : ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!