Politics

"15 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோத செயல்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 8-வது நாளாக மக்களவை, மாநிலங்களவையில் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விவாதம் செய்யவும், உள்துறை அமித்ஷா பதவி விலகவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை, மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியபோது, மீண்டும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.இதனால் கோபமடைந்த சபாநாயகர் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த 15 எதிர்க்கட்சி எம்.பி.-க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுகுறித்து விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது X சமூகவலைத்தள பக்கத்தில், "நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோத செயல். பாஜக அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கதக்கது. எம்.பிக்களின் கருத்துரிமையை பறிப்புதுதான் நாடாளுமன்றத்தின் தற்போதைய புதிய விதியா? நாடாளுமன்றம் விவாதம் நடத்த வேண்டிய இடமாக இருக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் இடமாக மாறக்கூடாது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பிக்களை உடனடியாக அவைக்குள் அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ”இந்தியாவில் இருந்தால் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” - தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை மிரட்டிய CISF அதிகாரி !